மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

முதல்வர் சொன்ன பதில் : திமுக வெளிநடப்பு!

முதல்வர் சொன்ன பதில் : திமுக வெளிநடப்பு!

தமிழக சட்டசபை கூட்டத்தில், கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக முதல்வரின் பதிலில் திருப்தி இல்லாததால், சட்ட சபையில் இருந்து எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை ஆகிய 6 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்தது. அதையடுத்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்ததால், 2 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது.

அதன் பின்னர், இன்று ஜூன் 19ஆம் தேதி திங்கட்கிழமை மீண்டும் தமிழக சட்டசபை காலை 10 மணிக்குக் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது, கொளத்தூர் தொகுதியில் வண்ண மீன்கள் பூங்கா அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதற்குப் பதில் அளித்துப் பேசிய மீன்வளத்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், வண்ண மீன்கள் பூங்கா கொளத்தூரில் அமைக்க அரசிடம் திட்டம் இல்லை. அதே நேரத்தில் மாதவரத்தில் வண்ண மீன்கள் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் அரசுப் பள்ளிகளில் வைஃபை அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியபோது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூறினார்.

இந்நிலையில், சுகாதாரத் துறை குறித்து கேள்வி எழுப்ப அனுமதி வழங்குமாறு தினகரன் ஆதரவாளரும், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.-வுமான தங்கதமிழ் செல்வன் கேட்டபோது, அதற்குச் சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். இதனால் தங்கதமிழ் செல்வன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். தங்கதமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்ததற்கு, மேஜையைத் தட்டி திமுக எம்.எல்.ஏ.-க்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

சட்டசபை வரலாற்றிலேயே ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் வெளிநடப்பு செய்வது இதுதான் முதல் முறையாகும். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பணம் வினியோகித்ததாகக் கூறப்படும் பிரச்னை தொடர்பாக, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக காவல் துறைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக, சட்டசபையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதற்கு அதிமுக-வினர் எதிர்ப்பு தெரிவித்தபோது சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் தெரிவிக்கையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 12 திமுக-வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த அரசு தொடர்ந்து நான்காண்டு ஆட்சி புரியும் என்றும் அவர் பதில் கூறினார்.

அதையடுத்து, முதல்வரின் பதிலில் திருப்தி இல்லாததால் அவையில் இருந்து சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையை விட்டு வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பணப்பட்டுவாடா செய்ததாக முதல்வர், அமைச்சர்கள் மீது புகார் உள்ளது என்று சட்டசபையில் நான் தெரிவித்தபோது, பணப்பட்டுவாடா தொடர்பாக புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் கூறினார். ஆனால், விசாரணை தொடர்பான கேள்விகளுக்கு முதல்வர் பதில் தெரிவிக்க மறுக்கிறார். பணப்பட்டுவாடா தொடர்பான பிரச்னையில், முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அனைவரும் பதவிலிருந்து விலக வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

கேள்வி நேரம் முடிந்ததும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி .உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon