மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

வீரர்களின் போஸ்டர்களை எரித்த ரசிகர்கள்!

வீரர்களின் போஸ்டர்களை எரித்த ரசிகர்கள்!

பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தாங்கி கொள்ள முடியாத ரசிகர்கள் கோபத்தில் இந்திய வீரர்களின் போஸ்டர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தான் பேட்டிங்கை தொடங்கி 50 ஓவரில் 338 ரன்களை குவித்தது. பின்னர் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், இந்தியா எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது. இதனால், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பால்டி, கர்நாடக மாநிலம் குல்பர்க்கா, உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ரசிகர்கள் நடுரோட்டில் டிவிகளை போட்டு உடைத்தனர். இந்திய அணி வீரர்களின் போஸ்டர்களை எரித்தனர். கோபம் தாங்க முடியாமல் பலர் கோஷங்களை எழுப்பி கண்ணீர் வடித்தனர். தேவையில்லாத பதற்றத்தையும், வன்முறையையும் தடுக்க, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள தோனியின் வீட்டின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய வீரர்களின் வீட்டுக்குப் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள கிளாக்டவர் ரவுண்டானா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பாகிஸ்தானில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் வெற்றியைக் கொண்டாடினர். இதில், பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon