மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 28 ஜன 2020

ஜி.எஸ்.டி : நுகர்பொருள் விற்பனையில் பாதிப்பு!

ஜி.எஸ்.டி : நுகர்பொருள் விற்பனையில் பாதிப்பு!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்ட பிறகு சிறிது காலத்துக்கு வேகமாக விற்பனையாகும் நுகர்பொருட்களுக்கான விற்பனையில் பாதிப்பு ஏற்படும் என்று பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டு வரும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டு, வருகிற 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருக்கிறது. அதற்கு முன்னர் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் நிர்ணயித்தது. அதில், பிஸ்கெட்டுகளுக்கு 18 சதவிகித வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பின்னர் பிஸ்கெட் உள்ளிட்ட வேகமாக விற்பனையாகும் நுகர்பொருட்களுக்கான (FMCG) விற்பனை குறையும் என பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டானியா நிறுவன நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி கூறுகையில், “ஜி.எஸ்.டி. அமலான பிறகு தற்காலிகமாக நுகர்பொருள் விற்பனையில் சரிவு ஏற்படும். எனினும், அடுத்த மூன்று மாதங்களில் விற்பனை இயல்பு நிலைக்குத் திரும்பும். அதுவரையில் நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியான சூழல் நிலவும். ஜி.எஸ்.டி. அமலாக்கம் பொருட்கள் விற்பனையை எந்த விதத்தில் பாதிக்கும் என்பது விநியோக நிறுவனங்களுடனான நேரடி தொடர்பின் மூலம் கண்டறியப்படும். விநியோக நிறுவனங்களின் கையிருப்பு குறைப்பால் ஏற்படும் இடர்பாடு மற்றும் புதிய வரி விதிப்பு நடைமுறைக்குப் பிறகு, பொருட்களை வாங்கும் பழக்கத்தை நுகர்வோர் எவ்வாறு கையாளுகின்றனர் போன்றவை குறித்து அடுத்து வரும் 3 முதல் 6 மாதங்களில் தெரியவரும். புதிய வரி விகிதங்கள் நடுநிலையானதாகவே உள்ளன. அதற்கான பலன் நீண்ட கால அடிப்படையிலேயே கிடைக்கும்” என்றார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon