மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

ஹெல்மெட் அணிந்தால் ரோஜா!

ஹெல்மெட் அணிந்தால் ரோஜா!

ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு ரோஜாப்பூவுடன் பரிசும் வழங்கி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார்.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் மரணங்களை தடுக்கும் விதமாக சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. திரைப்பட பாடகர் கானா பாலா பாடிய விழிப்புணர்வு பாடல் அடங்கிய வீடியோ கேசட்டை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கடந்த வாரம் வெளியிட்டார். நேற்று (ஜூன் 18) சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு அனுசரிக்கப்பட்டது.

சென்னை முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீசாரும், பொதுமக்களும் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சிகளை சாலை ஓரமாக நின்று நடத்தினார்கள்.

மேலும் சென்னை தி.நகரில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கும், சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டியவர்களுக்கும், துண்டு பிரசுரங்களுடன் ரோஜாப் பூ மற்றும் பரிசுகளை வழங்கினார்.

அப்போது கமிஷனர் முன்னிலையில், போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிப்போம் என்று வாகன ஓட்டிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங், இணை கமிஷனர் பவானீஸ்வரி, துணை கமிஷனர்கள் அரவிந்தன், சசிமோகன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நெல்லையில் கடந்த மாதம் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு போலீசார் பேனா பரிசளித்து ஊக்குவித்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon