மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

இலக்கைக் குறைக்கும் தொலைத் தொடர்புத் துறை!

இலக்கைக் குறைக்கும் தொலைத் தொடர்புத் துறை!

தொலைத் தொடர்புத் துறை நெருக்கடியான சூழலில் இருப்பதாலும், கடும் வருவாய் இழப்பைச் சந்தித்து வருவதாலும், இந்த நிதியாண்டுக்கான வருவாய் இலக்கை 38 சதவிகிதம் வரை குறைக்குமாறு மத்திய நிதியமைச்சகத்துக்கு மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய தொலைத் தொடர்புத் துறையானது கடந்த சில மாதங்களாகவே கடுமையான இழப்புகளைச் சந்தித்து வருகிறது. அனைத்து தொலைத் தொடர்புச் சேவைகளிலும் நெருக்கடியான சூழல் நிலவுகிறது. போதாததற்கு கடந்த செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் புதிதாக அறிமுகமான பிறகு, போட்டி காரணமாக கட்டணங்கள் குறைக்கப்பட்டன. இதனால் போதிய வருவாய் கிட்டவில்லை. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளுக்கான தொகையைச் செலுத்துவதிலும் நெருக்கடி அதிகமானது.

இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் சார்பாக நிதியமைச்சகத்துக்குக் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. அதில் தொலைத் தொடர்பு ஆணைய உறுப்பினர் அனுராதா மித்ரா, ‘தொலைத் தொடர்புத் துறைக்கான வரியல்லாத வருவாய் இலக்கு ரூ.47,304.71 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்துறையில் நெருக்கடியான சூழல் நிலவுவதாலும், வருவாய் இழப்பு தொடர்ந்து வருவதாலும், வருவாய் இலக்கை ரூ.29,524.15 கோடியாகக் குறைக்க வேண்டும். உரிமம் பெறுதலுக்கான கட்டணமும் ரூ.16,664 கோடியிலிருந்து ரூ.9,255 கோடியாகக் குறைந்துவிடும். அதேபோல, ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டண வருவாய் இலக்கும் ரூ.26,445.03 கோடியாக உள்ளது. அதை ரூ.17,056.64 கோடியாகக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும். சந்தையில் போட்டி காரணமாக கட்டணக் குறைப்பு நடந்து வருவதாலேயே வருவாய் இழப்பு தொடருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon