மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

ரஜினி அரசியல் பிரவேசம்: திருமா

ரஜினி அரசியல் பிரவேசம்: திருமா

ரஜினியின் அரசியல் வரவை இரு கரம் நீட்டி வரவேற்பவர் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் திருமாவளவன். தமிழர்கள் ரஜினியை முதல்வராக்காவிட்டால் அவர் பிரதமராகிவிடுவார் என்று கூறும் அளவிற்கு ரஜினியின் கவர்ச்சி பிம்பத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர் திருமா. தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும் என்று தொடர்ச்சியாகக் கூறிக்கொண்டிருக்கிறார் அவர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மையமாக வைத்து நியூஸ் 7 தொலைக்காட்சி நேற்று(18.6.2017) இரவு ஒரு நேர்காணலை திருமாவளவனிடம் நடத்தியது. நெறியாளர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் நிதானமாகவும் பொறுமையோடும் அதே நேரத்தில் தன் அரசியல் புரிதலை மற்றவர்களுக்கு விளக்கும் விதத்திலும் பதில்களை முன் வைத்தார். “தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறுகின்றீர்கள். எனில் திமுகவில் ஸ்டாலின் இல்லையா? கருணாநிதியிடம் இருக்கும் அரசியல் கூர்திறன் ஸ்டாலினிடம் இல்லையா? ஸ்டாலினின் ஆளுமைத் திறனிலும் அரசியல் அனுபவத்திலும் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்ற கேள்வியை நெறியாளர் முன் வைத்தார். அதற்கு பதில் கூறிய திருமா, “நான் அப்படிக் கூறவே இல்லையே… கருணாநிதியையும் ஸ்டாலினையும் எதற்காக ஒப்பிட்டு கூறுகின்றீர்கள்?. கலைஞர் வேறு, ஸ்டாலின் வேறு.. கருணாநிதி பெரியாரின் கொள்கைகளை மேடைகளிலே உரக்க பேசியவர். ஸ்டாலின் அப்படி பேசுவதில்லை. ஆனால் கருணாநிதியிடம் இருந்த பெருவாரியான மக்கள் செல்வாக்கு ஸ்டாலினுக்கு இருக்கிறதா என்பதுதான் கேள்வி” என்றார்.

மேலும்,“தமிழ் தேசியத்தை பேசியவர்கள் நீங்கள். இன்று தமிழர் அல்லாத ரஜினி தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்கிறீர்கள். இது எப்படி சரியாக இருக்க முடியும்?” என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு, “. தமிழ் தேசியத்தை பேசியவன் நான்தான். இல்லையென்று சொல்லவில்லை. நான் பேசியதைத்தான் பல தம்பிகள் இன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதன் பிறகு தேசியத்தின் பால் நான் கொண்ட புரிதல் வேறு. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ரஜினியை அரசியலுக்கு வரக் கூடாது என்று சொன்னால் அவரைக் கண்டும் நாம் அஞ்சுவதாகத்தான் பொருள். நாம் தமிழ் தேசியம் பேசுவோம். தமிழனை தமிழன்தான் ஆள வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதை நம் மக்களிடம் தான் சென்று உரைக்க வேண்டும். ரஜினியிடம் அல்ல. ரஜினியை தமிழக அரசியலுக்குள் வரக் கூடாது என்று கூறுவது தேசியத்திற்கு எதிரானது” என்றார்.

ரஜினியின் பலம் என்று எதை நினைக்கின்றீர்கள்? என்ற நெறியாளர் கேள்விக்கு, “இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு.?. ரஜினியின் கரிஷ்மா அதாவது, கவர்ச்சி பிம்பமே அவரது பலம். எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் எப்படி அவர்களுடைய கவர்ச்சி பிம்பம் அரசியல் ராஜபாட்டையை உருவாக்கிக்கொடுத்ததோ அதே கவர்ச்சி பிம்பம் ரஜினியிடம் இருக்கிறது என்பது என் நம்பிக்கை. நான் கூறுவதை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். ரஜினி தமிழகத்தை ஆள வேண்டும் என்பதல்ல என் விருப்பம். ரஜினிக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது என்பதைத்தான் நான் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறேன்” என்றார் திருமா.

மேலும் அவரிடம், “ரஜினி அப்படியென்ன நாட்டிற்குச் செய்துவிட்டார்? எதற்காக அவர் அரசியலுக்கு வர வேண்டும்? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுகிறதே?” என்று கேட்டார் நெறியாளர். அதற்கு பதிலளித்த திருமா, “எம்ஜிஆர் நாட்டிற்கு என்ன தியாகத்தை செய்துவிட்டார்?. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாரா இல்லை சிறைக்குச் சென்றாரா? இல்லையே..? ஜெயலலிதா நாட்டிற்காக என்ன செய்தார்?. ஒன்றும் செய்யவில்லையே.. அவர்கள் அரசியலுக்கு வந்த பிறகு என்ன செய்தார்கள் என்பதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். நாட்டிற்கு தொண்டாற்றியவர்கள்தான் நாட்டை ஆள வேண்டும் என்று சொன்னால் இன்று தியாகிகள் மட்டுமே நாட்டை ஆண்டு கொண்டிருப்பார்கள்” என்றார் அவர்.

“ரஜினியின் திரைப் படங்களை தமிழர்கள் ரசிக்கிறார்கள். ஆனால் ரஜினி ஒரு கன்னடர். எனவே அவர் தமிழக அரசியலுக்குள் நுழைய முடியாது. அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்ற கருத்து நிலவுகிறதே?” என்ற கேள்வியை முன்வைத்தார் நெறியாளர். அதற்கு பதில் சொன்ன திருமாவளவன், “எம்ஜிஆரை மலையாளி என்றார்கள். ஆனால் அவர்தான் முதல்வரானார். ஜெயலலிதாவை கன்னட பார்ப்பனர் என்று விமர்சித்தார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவர்தான் முதல்வராக இருந்தார். ரஜினியின் கவர்ச்சி பிம்பத்திற்கும் அந்த வலிமை இருக்கிறது. ரஜினி ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் அதை ஊடகங்கள் முதன்மைப்படுத்துகின்றன. ஊரெங்கும் அதே பேச்சாக இருக்கிறது. அவர் திரைப்படம் வெளியானால் அது திருவிழாவாகிறது. இதுதான் ரஜினியின் பலம். ரஜினி ரசிகர்களைக் கடந்து மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள நம்மால் முடியவில்லை. இதுதான் பிரச்சனை” என்றார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் பாஜகவோடு இணைய வாய்ப்பிருக்கிறது. ரஜினி ஏற்கனவே இந்துத்துவா சிந்தனையின் சாயல் நிறைந்தவர். இந்நிலையில் இந்துத்துவாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட நீங்கள் ரஜினியை ஆதரிப்பது சரியா? என்ற கேள்வியை முன்வைத்தார் நெறியாளர். அதற்கு , “நான் மீண்டும் மீண்டும் கூறுகின்றேன். நான் ரஜினியை ஒருபோதும் அரசியலுக்கு வர வேண்டும் என்று வரவேற்கவில்லை. ஆதரிக்கவும் இல்லை. ரஜினிக்கு அரசியலுக்கு வரும் உரிமை இருக்கிறது. அவர் தனியாக கட்சி தொடங்கும் பட்சத்தில் அவருக்கு வெற்றி கிடைக்கும் என்பது என் கருத்து. விருப்பமல்ல. ரஜினி அரசியலுக்கு வரலாம். பாஜகவோடு இணையலாம். இன்னும் சொல்லப்போனால், பாஜகவிற்கு மேலே இந்துத்துவா கொள்கைகளை முன்னெடுக்கலாம். அதை நான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அப்போது எதிர்க்க வேண்டுமே தவிர, அவரை அரசியலுக்குள்ளே வராதே என்று கூறுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என்றார் திருமாவளவன்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon