மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

லண்டன் மசூதியில் தீவிரவாத தாக்குதல்!

லண்டன் மசூதியில் தீவிரவாத தாக்குதல்!

ஜூன் 19-ம் தேதி இரவு, லண்டனின் பின்ஸ்பரி பார்க்கில் ஒரு மசூதியில் தொழுகை முடிந்து மக்கள் வெளியே வருகையில், கூட்டத்தை நோக்கி ஒரு வேன் வேகமாக பாய்ந்தது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், 8 பேர் படுகாயமடைந்தனர்.

ரமலான் தொழுகைகளை முடித்துவிட்டு வெளியே வந்த மக்களை குறிவைத்த இந்த தாக்குதலை பற்றி தீவிரவாத தடுப்பு பிரிவு விசாரணை செய்து வருகிறது. வேனை ஓட்டி வந்த 48 வயது ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் தெரசா மே பேசுகையில், “பின்ஸ்பரி பார்க்கில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறனர். ஜூன் 19 காலை கோப்ரா அவசர கமிட்டியை கூட்டி அவர்களுடன் இது தொடர்பாக நான் ஆலோசிக்க உள்ளேன்” என அவர் கூறினார்.

எதிர்கட்சி தலைவரான ஜெரேமி கார்பின், “இந்த சம்பவத்தால் அதிர்ந்து போயிருக்கிறேன்” என கூறினார். பின்ஸ்பரி பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரேமி கார்பின் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் மேயர் சாதிக் கான் இந்த தாக்குதல் தொடர்பாக, “லண்டனின் அப்பாவி மக்கள் மேல் நடத்தப்பட்டுள்ள இந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரமலான் தொழுகைகளில் ஈடுபடும் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்” என அவர் கூறினார்.

லண்டன் ஆம்புலன்ஸ் சேவை இது தொடர்பாக, “காயமடைந்த 8 பேர் 3 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற சிலருக்கு சம்பவம் நடந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது” என தகவல் தெரிவித்துள்ளது.

வேனில் இருந்து மூன்று பேர் வெளியே வந்ததை நேரில் பார்த்ததாக சிலர் கூறுகின்றனர். வேன் ஓட்டுநர் தவிர வேறு யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் டெயின் அபோட் இந்த தாக்குதல் தொடர்பாக, “அனைத்து மசூதிகளிலும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon