மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

கால் நூற்றாண்டைக் கடந்த `ஆஸ்கர் நாயகன்’!

கால் நூற்றாண்டைக் கடந்த `ஆஸ்கர்  நாயகன்’!

`இசைப்புயல்’ என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் திரைத்துறையில் இசைப்பணியைத் தொடங்கி இந்த ஆண்டுடன் 25வருடம் நிறைவு பெற்றுள்ளது.1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இவர் இசையமைத்த `ஸ்லம் டாக் மில்லியனர்’ என்ற இந்தி திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்திய திரைப்பட இசைத்துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியவர்.

தனது 25 வருட இசைப்பயணத்தையொட்டி லண்டனில் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 'நேற்று இன்று நாளை' (Yesterday Today Tomorrow) என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த இசை நிகழ்ச்சி வரும் ஜூலை 8ஆம் தேதி லண்டனில் மிகவும் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த 25 வருடங்களாகத் தொடரும் இசைப்பயணம், உண்மையிலேயே மறக்கமுடியாதது; ஆச்சரியமானது. இந்த இசை சுற்றுப்பயணம் முழுக்க இசையும் நினைவுகளும்தான். என் ரசிகர்களின் அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். அவர்களுடைய ஆதரவு எனக்கு ஊக்கம் தருகிறது. ‘ரோஜா’ முதல் ‘காற்று வெளியிடை’ படங்கள் வரைக்குமான என் இசைப்பயணத்தைக் கொண்டாடும் லண்டன் நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறேன் என்று தனது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரண், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் பங்கேற்க உள்ளார்கள். உலகில் உள்ள ரசிகர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon