மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 28 ஜன 2020

இது ஜெயலலிதாவின் ஆட்சியா? : பன்னீர்செல்வம்

இது ஜெயலலிதாவின் ஆட்சியா? : பன்னீர்செல்வம்

தற்போது நடப்பது ஜெயலலிதாவின் ஆட்சி இல்லை எனவும், அவர் அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட அதிமுக பன்னீர்செல்வம் அணி சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த செயல்வீரர்கள் கூட்டம் ஜூன் 18ஆம் தேதி பாளையங்கோட்டையில் நடைபெற்றது, கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம்,' தர்மயுத்தம் ஆரம்பித்து இத்தோடு 7வது கூட்டம் நடைபெறுகிறது, இது மாநாடு போல உள்ளது. எம்.ஜி.ஆர் அதிமுகவை ஆரம்பித்தபோது அவருடன் இருந்த தலைவர்களும், தொண்டர்களும் தற்போது நம் பக்கம் உள்ளனர். அதிமுக என்னும் இந்த இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று இங்கு கூடியுள்ளனர்.

ஆனால் இன்றைய நிலைமை வேறுமாதிரியாக உள்ளது, தற்போது ஆட்சியில் யார் உள்ளது என்பதை நீங்களே அறிவீர்கள். இதில் இடையில் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென ஸ்டாலின் காத்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு சசிகலா உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் 16 பேரை ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கிவிட்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு சசிகலா திரும்பிவந்த போது அவரை தன்னுடைய உதவியாளராக மட்டுமே ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார். அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட அவர்கள் ஜெயலலிதா மரணத்தின் வரை கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.அவர்கள்தான் தற்போது பொதுச்செயலாளராகவும், துணைப் பொதுச்செயலாளராகவும் உள்ள துர்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

அத்தகைய கும்பலிடமிருந்து கட்சியைக் காப்பாற்றவே எங்களுடைய தர்மயுத்தம் நடக்கிறது. ஜெயலலிதா 74 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுக்கள் அவிழும் வரை இந்த தர்மயுத்தம் தொடரும் என்று நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இன்று நடைபெறும் ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி கிடையாது. ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. அவர் முதல்வராக இருந்தபோது தொழில் வளர்ச்சிக்காக 96 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அவையனைத்தும் நிறைவேற்றப்படவில்லை. ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன. தற்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு உடனே உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வருமா?.தற்போதைய நிலையில் சட்டமன்றம் ,பாராளுமன்றம் என எந்தத் தேர்தல் வந்தாலும், அனைத்திலும் எங்கள் அணிதான் வெற்றிபெறும். மேலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார்' என்று தெரிவித்தார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon