மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

இந்தியாவில் கால்பதிக்கும் அந்நிய நிறுவனங்கள்!

இந்தியாவில் கால்பதிக்கும் அந்நிய நிறுவனங்கள்!

இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் 50க்கும் மேற்பட்ட சர்வதேச நடுத்தர நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் நுழையத் திட்டமிட்டுள்ளதாக ஃபிரான்சிஸ் இந்தியா கூறியுள்ளது.

ஃபிரான்சிஸ் இந்தியா ஹோல்டிங் நிறுவனம் அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தனது கிளைகளைத் தொடங்குவதற்கான உதவிகளைச் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் சமீபத்திய தரவுகளின்படி 50க்கும் மேற்பட்ட சர்வதேச நடுத்தர நிறுவனங்கள் அடுத்த 6 மாதங்களில் இந்தியாவில் கிளை பரப்பத் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில், கொரெஸ், மைகாடோ, எவிஸ்யூ, வால்ஸ்ட்ரீட் இங்கிலிஸ், பாஸ்தா மேனியா, லஷ் அடிக்ட்சன், மெல்டிங் பாட், யோகர்ட் லேப் மற்றும் மோனாலிசா போன்ற நிறுவனங்கள் முக்கியமானவையாக உள்ளது.

இது தவிர அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஏராளமான வர்த்தக நிறுவனங்களும் இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர சந்தையில் கால்பதிக்க முடிவுசெய்துள்ளன. இந்தியாவில் சுமார் 3000 கடைகளைத் தொடங்க இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்காக 300 முதல் 500 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய அவை தயாராக உள்ளன. இந்தியாவின் விரிவடையும் பொருளாதாரம், நுகர்வு வளர்ச்சி, நகரத்தில் உயரும் மக்கள்தொகை எண்ணிக்கை மற்றும் நடுத்தர வர்க்கம் வளர்ச்சி பெறுவது போன்ற காரணங்களால் இந்நிறுவனங்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்துள்ளன.

இது தொடர்பாக ஃபிரான்சிஸ் இந்தியா ஹோல்டிங்கின் தலைவர் கவுரவ் மரியா கூறுகையில், ”கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாகச் சில்லறை வர்த்தக அலை வீசியது. அப்போது, பெருநிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள் இந்தியாவில் நுழைந்தன. தற்போது, சிறு மற்றும் நடுத்தர பிராண்டுகளுக்கான நேரம். இந்தியாவில் தொழில் தொடங்கவுள்ள இந்த நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் உணவு மற்றும் பானங்கள் தொடர்பானவை. 13 நிறுவனங்கள் ஆடை வர்த்தகம் தொடர்பானவை. 13 நிறுவனங்கள் கல்வி பொருட்கள் தொடர்பானவை ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

எ.டி. கெர்னே அறிக்கையில், இம்மாதத்தின் தொடக்கத்தில் சீனாவை பின்னுக்குத் தள்ளி, உலகளவில் உத்தரவாதம் அளிக்கும் சில்லறை வர்த்தக சந்தையாக இந்தியா மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2016ஆம் ஆண்டில் இந்திய சில்லறை வர்த்தக சந்தையின் மதிப்பு 641 பில்லியன் டாலராக இருந்தது. 2026ஆம் ஆண்டில் இது 1.6 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon