மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

இந்தியா vs பாகிஸ்தான்: ஒரே நாளில் வெற்றியும் தோல்வியும்!

 இந்தியா vs பாகிஸ்தான்: ஒரே நாளில் வெற்றியும் தோல்வியும்!

நேற்று நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ஃபகர் சமான் 114 ரன்னும், பாபர் ஆசம் 46 ரன்னும் சேர்த்து பாகிஸ்தான் அணிக்குப் பலமான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். அதன்பின்னர் அதிரடியாக விளையாடிய மொகமது ஹஃபீஸ் 57 ரன்களைச் சேர்த்தார்.

பின்னர் 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இதுவரை பாகிஸ்தான் அணி 300 ரன்களுக்கு மேல் அடித்த போட்டிகளில் அதிக முறை வெற்றி கண்டுள்ளது என்பதால், இந்திய அணி சிறப்பான பேட்டிங் திறமையால் அதனை முறியடிக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஆமிர் வீசினார். ஆட்டத்தின் 3ஆவது பந்தில் ரோஹித் ஷர்மா எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அடுத்து வந்த கேப்டன் விராட் கோலிக்கு முதலிலே கேட்ச் மிஸ் செய்தபோதிலும், அடுத்தப் பந்தில் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். தவான் 21 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆமிரின் அபார பந்து வீச்சால் இந்தியா 33 ரன்களுக்குள் முக்கிய மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. அதன் பின்னர் நிதானமாக விளையாடிய யுவராஜ் இறுதியில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது விக்கெட்டினைப் பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் கடைசி நம்பிக்கை நாயகனாக இருந்த தோனியும் 4 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சச்சின் ஆட்டமிழந்ததும் டி.வி-யை ஆஃப் செய்துவிட்டு செல்லும் நபர்கள், நேற்று தோனி அவுட் ஆனதும் டி.வி-யை ஆஃப் செய்தனர். இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுக்க, நம்பிக்கை இழந்த ரசிகர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஹார்திக் பாண்டியா விளையாடினார். ஒரே ஓவரில் 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என அதிரடி காட்டிய பாண்டியா 43 பந்துகளில் 76 ரன்களைச் சேர்த்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஜடேஜா மற்றும் பாண்டியா ரன் ஓட முயற்சி செய்தபோது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதலால் ரன் அவுட் ஆகினார் பாண்டியா. அதன் பின்னர் ஜடேஜா 15 ரன்னிலும், அஸ்வின், பும்ப்ரா தலா ஒரு ரன்னிலும் அவுட்டாக இந்தியா 30.3 ஓவரில் 158 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் மொகமது ஆமிர், ஹசன் அலி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

ஒருபுறம் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இருப்பினும் நேற்று (ஜூன் 18) நடைபெற்ற உலக லீக் ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon