மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 26 ஜன 2020

சிவில் சர்வீஸ் தேர்வு: தமிழகத்தில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பு!

சிவில் சர்வீஸ் தேர்வு: தமிழகத்தில் 40 ஆயிரம்  பேர் பங்கேற்பு!

ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசு தேர்வாளர் ஆணையம் சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி, மத்திய அரசின் நிர்வாகப் பணியிடங்களான ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். போன்ற பல பணிகளைப் பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் இந்தாண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் 980 பணியிட வாய்ப்புகளை நிரப்புவதற்காக, கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டது. மேலும், இதற்காக விண்ணப்பிக்க மார்ச் 17ஆம் தேதி வரை கெடு விதித்திருந்தது. இந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 10 லட்சம் நபர்கள் விண்ணப்பித்தனர். இதில் தோராயமாக, சுமார் 6.3 லட்சம் பேர் தேர்வு எழுத தகுதி பெற்றனர். அப்படி தகுதி பெற்றவர்களுக்கான முதல் நிலைத்தேர்வு நேற்று (ஜூன் 18) இந்தியா முழுக்க 72 நகரங்களில் நடைபெற்றது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய ஐந்து நகரங்களில் நடந்த தேர்வில் சுமார் 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதில் இரண்டுகட்டமாகத் தேர்வு நடந்தது. முதல்கட்டமாக நடந்த முதல் தாள் தேர்வானது காலை 9.30 மணிக்குத் தொடங்கி 11.30 மணி வரையும், இரண்டாவது கட்டமாக நடந்த இரண்டாம் தாள் தேர்வானது மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் நடந்தது.

இந்த சிவில் சர்வீஸ் முதல் நிலைக்கான தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தின் இறுதி வாரத்திலோ அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலோ வெளியாக உள்ளது. இத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அடுத்தகட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இந்த மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவருக்கு நேர்முகத்தேர்வு டெல்லியில் நடத்தப்படும். இதில் தேர்வு பெறுபவர்களின் மதிப்பெண் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஆர்.எஸ். ஆகிய அரசுப் பணியிடங்களுக்கான பதவிகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon