மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

முதல்வர் செய்ய வேண்டியதை செய்த மு.க.ஸ்டாலின்!

முதல்வர் செய்ய வேண்டியதை செய்த மு.க.ஸ்டாலின்!

பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணைகள் கட்டிவருவதைப் பற்றி தமிழக முதல்வர் உட்பட பல கட்சித் தலைவர்களும் கண்டன அறிக்கைகளும், கடிதங்களும் எழுதியதோடு இருந்துகொள்ள, திமுக செயல்தலைவரும், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தடுப்பணை கட்டும் இடத்துக்கே சென்று பார்வையிட்டிருப்பது ஆந்திர அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஜூன் 18ஆம் தேதி காலை வேலூர் மாவட்டம் வாணியம்பாடிக்குத் திடீர் விசிட் அடித்தார். வாணியம்பாடிக்கும் குப்பம் நகருக்கும் இடையே பாலாறு என்ற கிராமத்தில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டிவருகிறது. இதற்காக பல வீடுகள் கையகப்படுத்தப்பட்டன. இது தவிர, பொலிகிரேவு கிராமத்திலும் இன்னொரு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் பற்றி ஏற்கெனவே ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைத்த ஸ்டாலின், மற்ற அரசியல்வாதிகள் போல நாம் இருக்க கூடாது; அங்கேயே நேரில் சென்று பார்த்துவிடலாம் என்று முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரான துரைமுருகனை அழைத்துக்கொண்டு நேற்று காலை புறப்பட்டார்.

காலை 8.30 மணியளவில் தமிழக ஆந்திர எல்லை கிராம மக்களுக்கு ஸ்டாலின் வருகிறார் என்று தெரிந்து குப்பம் அருகே கூட ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் குப்பம் காவல்துறைக்கே ஸ்டாலின் வருகிறார் என்று தெரிந்திருக்கிறது. அதன்பிறகு குப்பம் போலீஸார் வேலூர், வாணியம்பாடி காவல்துறையினரை தொடர்புகொண்டு, ‘என்னது ஸ்டாலின் வர்றாராமே அப்படியா?’ என்று விசாரித்துள்ளனர். அதன்பிறகு 9.3௦-க்குதான் குப்பம் போலீஸாருக்கு ஸ்டாலின் வருகை உறுதிப்படுத்தப்பட்டது.

இத்தனைக்கும் சென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழில் ஸ்டாலின் இன்று காலை ஆந்திரா போகிறார், பாலாற்றில் கட்டப்படும் தடுப்பணைகளைப் பார்வையிடுகிறார் என்று செய்தி வெளியிட்டிருந்தது. ஸ்டாலின் ஆந்திரா செல்வது செய்தியாகவே வெளிவந்தும், வாணியம்பாடி, வேலூர் போலீஸார் அன்று காலை 9.3௦-க்குதான் குப்பம் போலீஸாருக்கே தகவல் தெரிவித்துள்ளனர். குப்பம் போலீஸார் செல்லும்போதே ஆந்திரா தடுப்பணை கட்டும் இடத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தார் ஸ்டாலின்.

பின் அங்கேயே நின்று மீடியாக்களைச் சந்தித்து, “பாலாறு நதி நீர் பிரச்னை பற்றி தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்மீது ஆந்திர முதல்வர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். தமிழக அரசு, ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்காக ஒரு கமிட்டியை தமிழக அரசு அமைக்க வேண்டும்” என்று கூறிவிட்டு புறப்பட்டார் ஸ்டாலின்.

அதன் பிறகே குப்பம் போலீஸார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஸ்டாலினின் இந்த விசிட் ஆந்திராவிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. தமிழகச் சட்டமன்றத்திலும் இதுபற்றி ஸ்டாலின் பிரச்னை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது முகநூலில் இதுபற்றி தெரிவித்திருக்கும் ஸ்டாலின், ‘இன்று காலை வேலூர் மாவட்டம், கங்குந்தியில் ஆந்திர அரசு உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டேன். குப்பம் - கங்குந்தி இடையில் பாலாறு பாயும் 1 கிலோமீட்டரில் உள்ள தரைப்பாலத்தை மாற்றி, ரூ.4.5 கோடி செலவில் உயர்மட்டப் பாலமாக கட்டும் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியிருப்பது வேதனைக்குரியது. ஏற்கனவே வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்குப் பாலாறு மற்றும் கொசஸ்தலை ஆகிய ஆறுகள் மூலம் வரவேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு, பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதால், ஏராளமான நம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தட்டிக்கேட்டு, நம் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய தமிழக அரசோ, தங்களுடைய அரசை காப்பாற்றிக்கொள்ள குதிரை பேர ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.

இது தரைமட்டப் பாலம் என்று தெரிவித்தாலும், வருங்காலத்தில் தடுப்பணையாக மாற்றப்படும் என்ற அச்சம் விவசாயப் பெருங்குடி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாண்புமிகு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதுடன், தமிழக அரசு விழித்துக் கொண்டு செயல்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல, நதி நீர் பிரச்னைகளைக் கண்காணித்து, உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட ‘நதி நீர் பாதுகாப்பு கமிட்டி’ ஒன்றை அமைக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, அந்தப் பணியையும் உடனடியாக மேற்கொண்டு இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

“முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கிறார். இதுவரை அரசு சார்பில் ஆந்திர எல்லைக்கு சென்று யாரும் பார்வையிடாத நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், முதல்வர் செய்ய வேண்டிய வேலையை செய்திருக்கிறார்” என்று வாணியம்பாடியில் கூடிய பத்திரிகையாளர்கள் வெளிப்படையாகப் பேசிக்கொண்டனர்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon