மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

உத்தரவை மீறும் தனியார் மருத்துவக் கல்லூரிகள்!

உத்தரவை மீறும் தனியார் மருத்துவக் கல்லூரிகள்!

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது சென்டாக் அரசியல் நடைபெற்று வருகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடிய சீட்டுகளை, நிர்வாக ஒதுக்கீட்டில் விற்பனை செய்து வந்தார்கள்.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ‘அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சீட்டுகளை மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்காததற்கு ஆட்சியாளர்கள்தான் காரணம்’ என்று கூறி நேரடியாக சென்டாக் களத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக இறங்கினார். அதையடுத்து, மேனன் என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தனது செயலாளர் தேவநீதிதாஸ் அவர்களைப் பார்ட்டியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்ய வைத்தார். நீதி மன்றம், துணைநிலை ஆளுநர் செயலாளர் மனுவை ஏற்றுக்கொண்டது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில், மூன்று கட்டமாக விசாரணை நடைபெற்று, இறுதியாக ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ‘சென்டாக் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களை ஜூன் 19ஆம் தேதிக்குள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க வேண்டும். 20ஆம் தேதி மாணவர்கள் வகுப்பில் இருக்க வேண்டும். மாணவர்களிடம் ரூ.10 லட்சம் மட்டுமே பெற வேண்டும். ஜூலை 7ஆம் தேதி புதுச்சேரி அரசு முழு ரிப்போர்ட் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டது. அந்தச் செய்தியை நமது மின்னம்பலம்.காம் மொபைல் பத்திரிகையில் ஜூன் 17ஆம் தேதி காலை 7.00 மணி செய்தியில், வாதங்களையும், தீர்ப்புகளையும் பதிவு செய்திருந்தோம்.

இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவுப்படி தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மாணவர்களைச் சேர்த்துக் கொண்டதா என்று முதுநிலை மாணவர் சந்தோஷ் நாயரிடம் விசாரித்தோம்.

“52 இடங்களுக்கு, ஜூன் 18ஆம் தேதி வரையில் 16 மாணவர்கள்தான் பணம் செலுத்தியுள்ளார்கள். மற்ற இடங்களுக்கு மாணவர்கள் போனால் சென்டாக்கில் தேர்வு செய்யப்பட்ட குரூப் கொடுக்க மறுக்கிறார்கள். மாறாக நிர்வாகம் கொடுக்கும் குரூப்பில் சேருங்கள் என்று வேண்டா வெறுப்பாகப் பேசுகிறார்கள். ஒரு சில கல்லூரி நிர்வாகம், பெற்றோர்களிடம் ரூ.10 லட்சம் கொடுத்துட்டு, சேர்த்துட்டு போயிடுங்க. கொஞ்சநாள் பிறகு படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று மிரட்டலாகப் பேசியதால் பல மாணவர்களும், பெற்றோர்களும் திரும்பிச் சென்றார்கள்.

இதுகுறித்து, நேற்று முன்தினம் ஜூன் 17ஆம் தேதி இரவு துணைநிலை ஆளுநரைச் சந்தித்து பிரச்னைகளை கூறியபோது, ஆட்சியாளர்கள்தான் இதை சரி செய்ய வேண்டும் என்று ஆளுநர் கூறினார். நாங்கள் யாரையும் நம்பவில்லை. உங்களைத்தான் நம்புகிறோம். மாணவர்களைச் சேர்த்து விடுங்கள் என்றோம். பார்ப்போம் என்றார். தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகிகள் சென்டாக் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களைத் தைரியமாக தட்டிக்கழிப்பதற்குத் தமிழக பாஜக-வில் முக்கிய பதவியில் உள்ளவரைச் சந்தித்ததே காரணம்” என்கிறார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon