மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

வாராக்கடன் வசூல்: வங்கிகள் தீவிரம்!

வாராக்கடன் வசூல்: வங்கிகள் தீவிரம்!

வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களிடம் அவற்றை வசூலிப்பது தொடர்பாக வங்கிகள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.

வங்கிகளின் மொத்த வாராக்கடன், 7.11 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. நாட்டின் முக்கிய பிரச்சனையாக இது உள்ளது. இந்த பிரச்னைக்குத் தீர்வுகாணும் வகையில், ரிசர்வ் வங்கி சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

அதன்படி, கடன் பாக்கி வைத்துள்ள நிறுவனங்கள் மற்றும் தனி நபரை, திவாலானவராக அறிவித்து சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு ஆலோசனை வழங்க, ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி திங்கட்கிழமை (இன்று) வங்கிகள் கூடி ஆலோசனை நடத்தவுள்ளன. இதில் வாராக்கடன் பட்டியலில் உள்ள முதல் 12 நிறுவனங்களில் 6 நிறுவனங்களிடம் இருந்து வாராக்கடனை வசூலிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.

இதில், புஸ்ஸான் ஸ்டீல் (ரூ.44,478 கோடி), எஸ்ஸார் ஸ்டீல் (ரூ.37,284 கோடி) புஸ்ஸான் பவர் அண்ட் ஸ்டீல் (ரூ.37,248 கோடி), அலோக் இண்டஸ்டிரீஸ் (ரூ.22,075 கோடி) அம்டெக் ஆட்டோ (ரூ.14,074 கோடி) மற்றும் மொன்னெட் இஸ்பட் (ரூ.12,115 கோடி) ஆகிய நிறுவனங்களும் அடக்கம். முதல் 12 நிறுவனங்களின் வாராக்கடன் அளவு ரூ.2.5 லட்சம் கோடியாகும். அதாவது மொத்த வாராக்கடனில் 25 சதவிகிதம் ஆகும்.

இது தொடர்பாக வங்கிகள், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்துக்கு (என்சிஎல்டி) பரிந்துரைக்கும். அதன்பின்னர், அந்த நிறுவனம் பெற்ற கடன்களை அடைப்பதற்கான வழிமுறைகள் குறித்து, 180 நாள்களுக்குள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட வழக்குகளில், மேலும், 90 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும். அவ்வாறு, 270 நாள்களுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழி காணப்படாவிட்டால், அந்த நிறுவனம் அல்லது தனிநபர் திவாலானவராக அறிவிக்கப்பட்டு, சொத்துகள் விற்பனை உள்ளிட்டவை மூலம் கடன் ஈடு செய்யப்படும்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon