மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

உலக யோகா தினம்!

உலக யோகா தினம்!

ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகக் கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஐ.நா. சபை யோகா தினத்தை அறிவித்தது. இந்த ஆண்டுக்கான யோகா தினம் வருகின்ற புதன்கிழமை (ஜூன் 21 ஆம் தேதி) கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் லக்னோவில் கொண்டாடுகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மூன்றாவது முறையாக கொண்டாடப்படவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு யோகக்கலையை கற்றுக்கொடுப்பதே அதன் பிரதான நோக்கமாகும். இதனால் நாடு முழுவதும் பல பகுதிகளில் மக்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் நேற்று (ஜூன் 18) காலை நடைபெற்ற யோகா பயிற்சியில் திரளான ஆண்களும், பெண்களும் பங்கேற்று, மூச்சுப் பயிற்சிகளையும், பல்வேறு யோகாசனங்களையும் செய்தனர்.

இதேபோல் அமெரிக்காவின் உள்ள வாஷிங்டன் பகுதியில் நேஷனல் மாலில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உடல்களை வளைத்து பல்வேறு யோகாசனப் பயிற்சிகளைச் செய்துவருகின்றனர். மேலும் யோகப் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம், மனமும் தூய்மையடையும் என்று யோகா பயிற்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

யோகா என்பது சமயம் சார்ந்ததல்ல என்பதை மேற்கத்திய மக்கள் புரிந்துக்கொண்டிருப்பதாகவும் இதன் பலனாக ஆயிரக்கணக்கானோர் அதில் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா தெரிவித்துள்ளார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon