மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

சிறப்புக் கட்டுரை: தேவை அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனமாற்றம்!

சிறப்புக் கட்டுரை: தேவை அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனமாற்றம்!

சமீபகாலமாக பள்ளிக் கல்வித்துறையில் வரவேற்கத்தக்க வகையில் நிறைய மாற்றங்கள். ப்ளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இனி ரேங்க் அடிப்படையில் வெளியிடப்பட மாட்டாது என்று அறிவித்து, அதை உடனடியாக செயல்படுத்தியது முதல், ப்ளஸ் ஒன் வகுப்புக்கும் இனி பொதுத்தேர்வு நடத்தப்படும்; ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ ஆகியவற்றின் மதிப்பெண் இரண்டையும் சேர்த்தே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவித்ததுவரையில் பள்ளிக் கல்வித்துறை பல அதிரடிகளை நிகழ்த்தி வருகிறது. கல்வித்துறை மானிய கோரிக்கையிலும் பல புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பலரும் எதிர்பார்த்த ‘அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும்’ என்ற அறிவிப்பு வராததில் கல்வியாளர்களுக்கு சற்றே ஏமாற்றம்தான்.

அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்? இந்தக் கேள்விக்கு விடை தேடும் முன்பு, அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் ஏன் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும். தரமான கல்வி, ஆரோக்கியமான கற்றல் சூழல், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், திறன்மிக்க ஆசிரியர்கள், அதிக மதிப்பெண் பெற வைப்பதற்கான பயிற்சி அனைத்தும் தனியார் பள்ளிகளில்தான் கிடைக்கின்றன என்று அவர்கள் நம்புவதுதான் தங்கள் குழந்தைகளை அங்கு படிக்க வைக்க காரணம். (உண்மையில் அவர்கள் இருப்பதாக நம்பும் பலதும் தனியார் பள்ளிகளில் இருப்பதில்லை என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை என்பது வேறு விஷயம்.) அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்தால், தங்கள் குழந்தைகள் படிக்கிறார்கள் என்பதற்காக அத்தனை வசதிகளையும் அரசுப் பள்ளிகளுக்கு அரசு ஊழியர்கள் ஏற்படுத்தி கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாகவே இந்தக் கோரிக்கையைக் கல்வியாளர்கள் முன்வைக்கிறார்கள். பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட அரசு இயந்திரத்தை இயக்குவதே அரசு ஊழியர்கள்தானே?

இது ஒருவகையில் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலைதான். அவரவர் தத்தம் வேலைகளை ஒழுங்காக செய்தாலே, அனைத்தும் நன்றாகவே நடக்கும். பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள், திட்டங்களைத் தீட்ட வேண்டிய அரசு என அனைத்தையும் சேர்த்தே சொல்கிறேன். இவை அனைத்தும் திறம்பட சரியாக நடந்தாலே போதும். அரசு ஊழியர்கள் மட்டும் அல்ல; அனைத்து தரப்பு மக்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைப்பார்கள். தனியாரிடம் போய் லட்சங்களைக் கொட்டி தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு வேண்டுதலா என்ன? உயர் படிப்பில் அரசு கல்வி நிறுவனங்களைத் தேடும் அவர்கள், பள்ளிக்கல்வியில் மட்டும் புறக்கணிக்கவா போகிறார்கள்?

‘இந்தியப் பள்ளிகளில் பணியாற்றும் 23.6 சதவிகித ஆசிரியர்கள் பள்ளிக்கே வருவதில்லை அல்லது பள்ளியில் இருப்பதில்லை’ என்கிறது உலக வங்கியின் அறிக்கை. ஆசிரியர்கள் மனதுவைத்தால் மட்டுமே மாற்றம் சாத்தியமாகும். அதுமட்டுமல்லாமல், காலமாற்றத்துக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தகுதிப்படுத்த வேண்டும். தகுதிவாய்ந்த கல்வியாளர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் கொண்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். குறிப்பாக, கற்பித்தல் முறையில் மாற்றம் வேண்டும். ஆசிரியர்களை மையமாகக்கொண்ட வகுப்பறைகள், மாணவர்களை மையப்படுத்தியதாக மாற்றப்பட வேண்டும். கல்விப் பணிகளைத் தவிர, வேறு எந்தப் பணிகளையும் ஆசிரியர்களுக்குத் தரக் கூடாது. மக்கள்தொகை கணக்கெடுப்பு, பேரிடர், தேர்தல் என நாட்டில் எது நடந்தாலும் முதலில் ஆசிரியர்களைத்தான் குறிவைக்கிறது அரசு நிர்வாகம். இது தவிர்க்கப்பட வேண்டும்.

தற்போது வரை நிறைய பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏராளமான ஆய்வக உதவியாளர்கள், கிளர்க், பியூன், வாட்ச்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றையெல்லாம் உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுப் பள்ளிகள் பலவற்றில் கழிவறை வசதி இல்லை. இருந்தாலும், அவற்றில் பல பயன்படுத்தும் வகையில் இல்லை. பல பள்ளிகளில் மாணவர்களுக்குக் குடிநீர்கூட இல்லை. பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியையும் அவசரக்கால வேகத்தில் செய்ய வேண்டும்.

கல்விதான் சமூகத்தை உருவாக்குகிறது. சமூகத்தின் அடித்தளமாகவும் இருக்கிறது. அரசுப் பள்ளிகள் மூலம் மட்டும்தான் சமுதாயம் வளர முடியும். தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளைதான் நடக்கிறது. கல்வியை அவர்கள் வியாபாரம் ஆக்கி விட்டார்கள். பல்வேறு விதிமீறல்கள், குழந்தைகள் உரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள். குழந்தைகளுக்கு மன உளைச்சலைத் தருகின்றனர். எனவே, நாளைய சமுதாயத்தை தரமானதாக உருவாக்க அரசுப் பள்ளிகள்தான் ஒரே தீர்வு. இதை அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளைவிட அதிகமாக எத்தனை மடங்கு சம்பளம் தங்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை உணர்ந்து, கற்பித்தல் பணியை செவ்வனே செய்ய வேண்டும். தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக தினம் தினம் புதிய விஷயங்களைக் கற்று தங்கள் தகுதிகளை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில் சமீபத்தில் நான் சந்திக்க நேர்ந்த இரு தலைமை ஆசிரியர்களைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். ஒருவர் கோவை சீரநாயக்கன்பாளையத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன். இன்னொருவர் நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலு.

சீரநாயக்கன்பாளையம் தலைமை ஆசிரியர் சரவணன், நான்கு வருடங்களுக்கு முன்னர் அந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று இருக்கிறார். அவர் பணியில் சேர்ந்தபோது பள்ளி வளாகம் முழுவதும் ஒரே புதர் காடாக இருந்திருக்கிறது. பாம்புகள் நடமாட்டமும் சர்வசாதாரணமாக இருந்திருக்கிறது. அதன் காரணமாகவே அந்தப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்ந்த பெற்றோர் பயந்திருக்கிறார்கள். தலைமை ஆசிரியர் செய்த முதல் காரியம், பொக்லைன் வாடகைக்கு விடும் தனது முன்னாள் மாணவர் ஒருவரின் உதவியோடு அந்தப் புதர் காடுகளை அகற்றியதுதான். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுத்தமான கழிவறை என அவர் காட்டிய அக்கறை, பள்ளியை நோக்கி ஊர்மக்களைத் திரும்ப வைத்திருக்கிறது. பள்ளியின் இரவு நேர காவலர் மற்றும் துப்புரவு தொழிலாளருக்கு அரசை எதிர்பார்க்காமல் இவரே நியமித்து சம்பளம் வழங்கி வருகிறார். பொதுத்தேர்வு பயிலும் மாணவர்களுக்கான மாலை நேர வகுப்பில் அவர்களுக்கு டீயும் ஸ்நாக்ஸும் வழங்கி வருகிறார். இதற்கான செலவுகளுக்கு இவரிடம் படித்த, வெளிநாட்டில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் உதவி வருகிறார்கள்.

தலைமை ஆசிரியர் சரவணனின் இத்தகைய அர்ப்பணிப்பான பணிகளால், இந்த வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் நூறு சதவிகிதம் தேர்ச்சியை அடைந்திருக்கிறது. அதன் விளைவாக மாணவர் சேர்க்கை விகிதமும் அதிகரித்து இருக்கிறது.

கீச்சாங்குப்பம் பள்ளி தலைமை ஆசிரியர் பாலுவின் பணிகளும் அவருக்குச் சற்றும் சளைத்தது இல்லை. 2004ஆம் ஆண்டு தமிழகத்தை சுருட்டிப்போட்ட சுனாமிக்கு இந்த கடலோர கிராமமும் தப்பவில்லை. இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் எண்பது பேர் அந்தப் பேரிடரில் மாண்டு போனார்கள். கடலையொட்டி இந்தப் பள்ளி இருந்ததால் பயந்துபோன கிராமவாசிகள், நகரத்தில் இருக்கும் வேறு பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப ஆரம்பித்தனர். அதன் காரணமாக 400 மாணவர்களுக்கு மேல் படித்த பள்ளியில் 190-க்கும் கீழ் எண்ணிக்கை குறைந்தது. மாணவர்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக 11 ஆசிரியர்களில் நால்வரை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்தனர்.

இந்த நிலையில்தான் இந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார் பாலு. ஊர்மக்கள், கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உதவியோடு பள்ளி கட்டடம் புதுப்பிக்கப்பட்டது. நூலகம், ஆய்வுக்கூடம், சுகாதாரமான கழிவறைகளை உருவாக்கினார். ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதையடுத்து பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியது. அடுத்தடுத்து அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் கிளாஸாக மாறி இருக்கிறது. யோகா, கராத்தே மற்றும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ. சான்றிதழும் கிடைத்துள்ளது.

தலைமை ஆசிரியர் பாலு மற்றும் சரவணன் இருவரையும் போன்ற தன்னலம் கருதாத ஆசிரியர்கள் தமிழகம் முழுக்க ஆங்காங்கு இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமானது என்பதுதான் வருத்தம். இவர்களைப் போன்று அனைத்து தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் தாங்கள் பணிபுரியும் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர் பணி ஒரு அறப்பணி என உணர்ந்து செயல்பட்டால், வருங்கால சந்ததி வளமான சந்ததியாக இருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

- ஆர்.லோகநாதன்

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon