மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 19 ஜன 2020

விக்னேஸ்வரன் பதவிக்கு ஆபத்து: ரிப்போர்ட் கேட்கும் டெல்லி!

மத்திய அரசு, ஆளுநர் மூலமாக முதல்வருக்கு பதவி விலகுமாறு நெருக்கடி தருகிறது. அதற்கு முதலமைச்சரின் கட்சியில் இருப்பவர்கள் சிலரே உடந்தையாக இருக்கிறார்கள். ஆனால், இதை புரிந்துகொண்ட மக்கள் முதல்வருக்கு எந்தப் பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்று கடையடைப்பு நடத்தியும், போராட்டங்கள் நடத்தியும் தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் தமிழ்நாடு மாதிரி தெரிந்திருக்கும். ஆனால் இந்த அரசியல் நிலவரம் தமிழ்நாட்டில் இல்லை. இலங்கையில்.

இலங்கையில் தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் வடக்கு மாகாணத்தின் முதல்வர் விக்னேஸ்வரன் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வடக்கு மாகாண ஆளுநரிடம் கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தீர்மானத்துக்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆனால், யாழ்ப்பாண மக்கள் தங்களது முதல்வர் விக்னேஸ்வரன்தான் என்றும் அவருக்கு தாங்கள் உறுதியான ஆதரவு அளிப்பதாகவும் கடையடைப்பும், ஆர்ப்பாட்டமும் செய்திருக்கிறார்கள்.

வேளாண்துறை அமைச்சர் ஐங்கர நேசன், கல்வித்துறை அமைச்சர் குருகுல ராஜா ஆகியோர் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. இதுபற்றி விசாரித்த முதல்வர் விக்னேஸ்வரன், தனி விசாரணைக் குழுவை உருவாக்கினார். அதன் அறிக்கையை அடுத்து அந்த இருவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்கினார் முதல்வர்.

இது தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை கைவிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன், விக்னேஸ்வரனிடம் பேசியதாகத் தெரிகிறது. அதற்கு விக்னேஸ்வரன் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விக்னேஸ்வரனுக்கு எதிராக கடந்த 15ஆம் தேதியன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களே வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினால்டு கூரேவிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அளித்துள்ளனர்.

‘ஏற்கெனவே கொழும்புவோடு சம்பந்தன் சமரசம் ஆகிவிட்டார். முதல்வர் விக்னேஸ்வரன் தமிழர்களின் உரிமைக்காகவும், இனப்படுகொலை பற்றிய பன்னாட்டு விசாரணைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதனால் அவரை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற கொழும்புவின் சதிக்கு சம்பந்தன் துணை போகிறார்’ என்கிறார்கள் யாழ்ப்பாண பத்திரிகையாளர்கள்.

சில நாள்களுக்கு முன் பேட்டியளித்த இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ‘விக்னேஸ்வரன் பதவி பறி போகப் போகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதை மேற்கோள் காட்டியிருக்கும் விக்னேஸ்வரன், ‘எனக்கு எதிராக கொழும்பு செய்யும் சதி அவருக்குத் தெரிந்திருக்கிறது என்று கருதுகிறேன். நான் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். அவர் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இலங்கை வடக்கு மாகாண விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் டெல்லி வெளியுறவுத்துறை அதிகாரிகள் அறிக்கை கேட்டிருக்கிறார்கள்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon