மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

நாகர்கோவிலில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்!

நாகர்கோவிலில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்!

நாகர்கோவில் நகராட்சி தெருக்களில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் வசூலிக்கப்படும் என்று நேற்று ஜூன் 18ஆம் தேதி நகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவில் நகராட்சியில் பொதுமக்கள், வணிகர்கள், நிறுவனங்கள் குப்பைகளைத் தெருக்களில் கொட்டும் பழக்கம் அதிகரித்துவருகிறது. இதனால், நாகர்கோவில் தெருக்கள் குப்பைகள் நிறைந்து அசுத்தமாகக் காணப்படுகிறது. இதனால், தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இந்த பிரச்னை குறித்து நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணக்குமார் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டதையடுத்து, ‘தெருக்களில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்’ என்று அதிரடி உத்தரவிட்டுள்ளார். நேற்று ஜூன் 18ஆ தேதி, நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

“குப்பைகளை பொது இடம் மற்றும் தனியார் இடங்களில் கொட்டினாலோ, வாகனங்களில் தூக்கி எறிந்தாலோ, கடை மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து கழிவுகளை பொது இடங்களில் கொட்டினாலோ ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத கழிவுகளாக அதற்குரிய பெட்டிகளில் தரம் பிரித்து கொடுக்காமல் இருந்தால், தனிநபர் வீடுகளுக்கு ரூ.100-ம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1,000-ம், மொத்த கழிவு உற்பத்தியாளர்களுக்கு ரூ.2,000-ம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கட்டடக் கழிவுகளை பிரித்துக்கொடுக்காமல் இருந்தால் ரூ.5,000, தோட்டம் மற்றும் மரக் கிளைகள் கழிவுகளை பிரித்து வழங்காமல் இருந்தால் ரூ.200, சமுதாயக் கழிவுகள் சேகரிக்கும் பொது குப்பை தொட்டிகளுக்கு வெளியே கொட்டினால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

கழிவுகளை தனிநபர்களின் இடத்துக்குள் எரித்தால் ரூ.200, தனிநபர்கள் பொது இடங்களில் எரித்தால் ரூ.500, நிறுவனங்களுக்கு ரூ.1000, மீன், கோழி, இறைச்சி கழிவுகளை தனியாக இருப்பு வைத்து பிரித்து வைக்காமலிருப்பதற்கு ரூ.1000, கழிவுகள் சேகரிக்கும் கூடையோ, பெட்டியோ வைக்காமல் விற்பனை செய்பவர், நடமாடும் விற்பனையாளர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

வியாபாரம் செய்பவர் நடமாடும் விற்பனையாளர் கழிவுகளை தனியாகப் பிரித்து தராமலிருந்தால் ரூ.200, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த 24 மணி நேரத்துக்குள் சுத்தம் செய்யாமலிருந்தால் சுத்தம் செய்வதற்கான வைப்புத் தொகையைப் பிடித்தம் செய்து கொள்வதுடன் ரூ.2,000 அபராதமும் விதிக்கப்படும்.

இந்த அபராதக் கட்டண விவரங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்” என்று நகராட்சி ஆணையர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் நகராட்சி ஆணையரின் இந்த அதிரடி உத்தரவு நாகர்கோவில் நகரின் தூய்மையை விரும்பும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபோன்ற அபராத விதிமுறைகளை தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் பரவலாக்கினால் நகரங்கள் தூய்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon