மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 19 ஜன 2020

நிகழ்களம்: திருக்குறள் தங்கவேலனார்: படிக்காத மேதையின் கதை - பாகம் 2

நிகழ்களம்: திருக்குறள் தங்கவேலனார்: படிக்காத மேதையின் கதை - பாகம் 2

தங்கவேலனார் தமிழையும் இலக்கியத்தையும் இறுகப் பற்றிக்கொண்டாரே தவிர, அவர் தன் குடும்பத்தை கைவிட்டுவிடவில்லை. நல்லறமும் இல்லறமும் ஒத்து ஒழுக இசைபட வாழ்ந்துகொண்டிருக்கிறார் அவர். என்னோடு பேசிக்கொண்டிருந்தவரிடம், “கடைக்குப் போய் பேசுவோமா?” என்று தயக்கத்தோடு கேட்டேன். “அதற்கென்ன போனால் போச்சு“ என்று கடைக்குக் கிளம்பிவிட்டார்.

தங்கவேலனாருக்குப் பேராவூரணியில் ஒரு டீக்கடை இருக்கிறது. அந்த டீக்கடையை அறியாதவர்கள் பேராவூரணிப் பகுதியில் இருக்க முடியாது. அதற்குக் காரணம் தங்கவேலனாரின் தமிழும் குறள் அமுதமும்தான். இந்தக் டீக்கடையில் திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய் மட்டும் வாங்கிக்கொண்டு டீ போட்டுக் கொடுப்பார் அவர். இது கடந்த பத்து ஆண்டுகளாக நடக்கிறது. அதே போல் டீக்கடை வாசலில் ஒரு கரும்பலகையில் தினம் ஒரு திருக்குறளும் அதற்குப் பொருள் விளக்கமும் எழுதப்பட்டிருக்கும். அது வெறும் டீக்கடை அன்று. பல அறிஞர்களையும், கல்விமான்களையும் உருவாக்கிய பல்கலைக்கழகம். இந்தச் சொற்பதம் சற்றே மிகைப்பட்டதாக உங்களுக்குத் தெரியலாம். ஆனால், அதுதான் சத்தியம். தன்னை நாடி அறிவுப்பசியோடு வரும் யாரையும் தங்கவேலனார் மறுப்பதில்லை. ஒருவரிடத்தில் எத்தனை குற்றம் குறை இருப்பினும் வெறுப்பதில்லை. அது அவர் பண்பு. தான் தொழில் செய்யும் இடத்திலே அவர்களுக்குத் திருக்குறளைத் திகட்டத் திகட்ட போதித்துக் கொண்டிருக்கிறார். திருக்குறள் பேரவையையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.

டீக்கடைக்குச் சென்றதும் எனக்கு அருந்த தேநீர் போட்டுக்கொடுத்தார். சிற்றுண்டியாகக் கொஞ்சம் மிக்சர். அதைப் பருகிக்கொண்டே அவர் பேசியதை கேட்கத் தொடங்கினேன்.

“வாழ்க்கை என்பது ஒருவன் தன்னிடத்தில் வைத்திருக்கிற நம்பிக்கை. அதன்பால் ஏற்படுகின்ற ஈடுபாடு. அவற்றின் அடிப்படையில் அவன் வளர்ச்சி அமையுமா? அவன் கையிலே இருக்கிற பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வளர்ச்சி அமையுமா? என்று பார்த்தால் பொருளாதாரம் முக்கியமானதாகி விடுகிறது. அதனால்தான் என் மகன் முகிலனையும் பெரிதாகப் படிக்க வைக்க முடியவில்லை. ஆனால், பல்வேறு தொழில்கள் அவர் வசம் இருக்கிறது. பெண் ஜெயசித்ராவைப் படிக்க வைத்தேன். அவர் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். ஒருபுறம் உழைப்பு… மறுபுறம் திருக்குறள். இரண்டையும் நான் இன்றுவரை கைவிடவில்லை. உழைப்பு பொருளைத் தந்தது. திருக்குறள் அருளைத் தந்தது. உலக இலக்கியம் எதுவும் அகப்பொருளைப் பற்றி பேசவே இல்லை. சிந்திக்கத் தூண்டவில்லை. தமிழ் இலக்கியம் மட்டுமே அகப்பொருளைப் பேசுகிறது. உயர்திணை, அஃறிணை பாகுபாடு தமிழில் மட்டுமே இருக்கிறது. மனிதன் ஒருவன் எதை விரும்புகிறானோ, அதை அடைய வைக்கிற ஆற்றல் தமிழ்மொழியில் இருக்கிற இலக்கியங்களுக்கு இருக்கிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

என்ற பாடலில் இருந்தே நீங்கள் இதைப் புரிந்துகொள்ளலாம். உங்களுடைய வளர்ச்சியும் உங்களுடைய வெற்றியும் உங்களுடைய முழு வீச்சும் உங்களின் முழு உணர்வின் வெளிப்பாடு.

இதைத்தான் திருக்குறள்

‘எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்

திண்ணியர் ஆகப் பெரின்’

என்று கூறுகிறது. இன்னொரு குறள்,

‘உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின்’

அதாவது, ‘நீ விரும்பியதை அடைவது மிக எளிது. அதற்கு வேறொன்றும் செய்ய வேண்டாம். நீ விரும்பியதையே எந்த நேரமும் எண்ணிக்கொண்டிரு’ என்கிறது குறள். உலக இலக்கியத்தையெல்லாம் நீ படிக்க வேண்டாம். தமிழைப் படி. தமிழில் திருக்குறளைப் படி. அந்தத் திருக்குறளில் பத்து உடைமைகளையும் படி. அது போதும். அது உனக்கு எல்லா ஆற்றலையும் வழங்கும்.

அதில் ஊக்கம் உடைமை இருக்கிறதே... அதுதான் நீ எதுவாக ஆக விரும்புகிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய் என்பதை மெய்ப்பிக்கிறது. அப்படித்தான் இந்த தங்கவேலனார் உருவானார்.

திருக்குறளுக்கு இணையான இலக்கியம் உலக அரங்கில் இல்லை என்பதை உணர்த்த நான் ஒரு தொகுப்பை எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்தத் தொகுப்பு உடைமை பத்தையும் மையமாகக் கொண்டது.

இந்த உலகத்தில் பிறந்தவர் அனைவரும் வாழப் பிறந்தவர்கள். ஆனால், அவர்களை ஏதோ ஒன்று அழிவை நோக்கி அழைத்துச் செல்கிறது. தன்னைத்தானே உணர்ந்து கொண்டவன்தான் மனிதன் ஆகிறான். தன்னைத்தானே உணர வைக்கும் ஆற்றல் திருக்குறளுக்கு உண்டு.

கல்வி எதற்கு? அறிவு எதற்கு?

அறிவு அற்றம் காக்கும் கருவி.

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்.

என்கிறது குறள். அதாவது, அவனுக்கு எல்லாம் தெரியும். ஆனால் அவன் அதற்கு எதிர்மாறாக நடக்கிறான். ஆக அறிவு என்பது அறிதல் மட்டுமல்ல. அது ஒழுக்கத்தை வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஒழுக்கம் அன்பை விதைக்க வேண்டும். அன்பு அருளை வளர்க்க வேண்டும். அருள் மட்டும் இருந்தால் போதுமா? பொருளைத் தேடிக்கொள்ளாமல் அருள் வேலை செய்யுமா?

ஒரு மனிதன் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமானால் அவன் அறிவுடையவனாக இருக்க வேண்டும். அவன் ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும். அவன் அன்புடையவனாக இருக்க வேண்டும். அவன் அருளுடையவனாக இருக்க வேண்டும். அந்த அறிவும், ஒழுக்கமும், அன்பும், அருளும் இணைந்து அவனை பொருளுடையவனாக மாற்ற வேண்டும். ஏன் பொருளுடையவனாக இருக்க வேண்டும். மெய் உணர்ந்த ஒரு நாள் எல்லா பற்றுகளையும் துறப்பதற்கு அவனிடத்தில் செல்வமும் இருக்க வேண்டும். அறிவைக்கொண்டு அறிவை வளர்ப்பது அறிவீனம். மூளை மட்டும் வளர்ந்துகொண்டே இருந்தால் அது நோய்க்கூறு அல்லவா? ஆகவே அறிவு, ஞானத்தை வளர்க்க வேண்டும்.

இதைத்தான் திருக்குறள்

‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு’

என்கிறது குறள்.

இந்தத் தத்துவம் உலக இலக்கியத்தில் எங்காவது உண்டா? சாஸ்திரம், தோத்திரம் இரண்டு மட்டும்தான் உலக இலக்கியத்தில் இருக்கிறது. தமிழில் மட்டுமே சூத்திரம் இருக்கிறது. சூத்திரம் என்பது இந்த உலகத்தை ஒரு வார்த்தையில் அடக்கிவிடுவது.

அவன், அவள், அது எனும் அவை மூவினை மெய்யின் தோன்றிறிய திதியே ஒடுங்கிய மலத்து உலதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்

என்கிறது சிவஞான போதம்.

இந்தப் பாடலின் பொருள் என்ன தெரியுமா? இதற்கான உரையை மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார் கப்பலோட்டிய தமிழர். பரம்பரை என்று சொல்கிறோம். பரம் என்பது வெற்றிடத்தில் இருந்து வந்தது. தந்தை உயிரைத் தருவான். தாய் ஏழு பரம்பரையின் உடல் கூறுகளை இணைத்து உடம்பைத் தருவாள். இந்த உலகத்தை தந்தவன் இறைவன். இறைவன் என்றால் அது சிவனல்ல... ஏசுவல்ல... அல்லாவல்ல. அண்டமும் பிண்டமுமாய் இருக்கும் இந்த பிரபஞ்சமே இறைவன். இந்தச் சூத்திரத்தில் உள்ள சாத்திரத்தை திருக்குறளில் பல இடங்களில் நீங்கள் தரிசிக்க முடியும்.

இன்னொரு குறள் உயிரை விட நாணமே பெரிது என்ற தத்துவத்த விளக்குகிறது.

‘நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்

நாண்துறவார் நாணாள் பவர்’

நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தைவிட மாட்டார் என்பது இந்தக் குறளின் பொருள்.

சிலப்பதிகாரத்தை நீங்கள் உற்று நோக்கினால் கண்ணகிக்கு அநீதி இழைத்த பாண்டிய மன்னன் அப்படித்தான் நாணத்தால் உயிரைத் துறந்தான்.

திருவள்ளுவன் ஒண்ணே முக்கால் அடிக்குள் இந்த உலகத்தையே அளந்துவிட்டானே... அவனை நாம் கற்றுத்தேராவிட்டால் யாருக்கு இழப்பு?

‘அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்’.

ஆஹா அடுத்த வீட்டுக்காரன் இப்படி செல்வாக்காக வாழ்கிறானே என்று எவனாவது நினைத்தால், அவன் வீட்டில் அதுவரை குடியிருந்த லட்சுமி தன் அக்காள் மூதேவியை அழைத்து, “இனி நான் இவன் வீட்டில் இருப்பது நியாயமல்ல. நீ வந்து குடியேறு” என்று வெளியேறிவிடுவாளாம்.

இந்த அறத்தை எங்காவது நீங்கள் கேட்டதுண்டா?

திருக்குறளை நீங்கள் என்னிடத்தில் இருந்து தெரிந்துகொள்வதைவிட நீங்களே அதில் கிடந்து உழன்று அதில் இருக்கக்கூடிய முத்துகளையும் வைரங்களையும் அள்ளியெடுத்து இந்த உலகம் உய்வுற முன் வைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்றார் தங்கவேலனார்.

தங்கவேலனாரின் இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது அவர் எங்கள் ஊரில் நடக்கும் திருவிழாவில் அழியாச் செல்வம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உரை வீச்சை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். நான் அவரைச் சென்று வரவேற்பதைவிட, அவரை இல்லத்துக்கு அழைத்து வந்து உபசரிப்பதைவிட அந்த மனிதரின் கருத்துகளை உலகறியச் செய்வதைத்தான் அவர் விரும்புவார் என்பது எனக்குத் தெரியும்.

ஆகவே, அவர் திருக்குறளை தேன் தமிழில் முழங்கிக்கொண்டிருக்க நான், அவர் கருத்துகளை உங்கள் முன் படைத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு தங்கவேலனாரைப் பற்றி எழுத இன்னொரு பாகம் அவசியம் என்று தோன்றுகிறது. திருமந்திரத்தையும் திருக்குறளையும் அவர் ஒப்பிட்டு விளக்கியதை நாளைய கட்டுரையில் படிக்கலாம்.

- வேட்டை பெருமாள்

பாகம் 1

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon