மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 29 ஜன 2020

முதலமைச்சர் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்

முதலமைச்சர் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பணம் விநியோகித்தது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக காவல்துறைக்குப் பரிந்துரைத்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இத்தகையச் குற்றச்சாட்டுக்கு ஒரு முதலமைச்சர் ஆளாவது இதுவே முதன்முறை.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் பற்றி விளக்கமளித்த ஆணையம், ‘ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் வாக்காளர்களுக்குப் பணம் வினியோகித்தனர் என்று புகார்கள் வந்தன. இத்தகவல் வருமான வரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் விஜயபாஸ்கருடன் தொடர்புடைய 32 இடங்களில் வருமானவரி ஆய்வு நடத்தப்பட்டது. அதில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதற்காக கட்சியின் பல்வேறு தலைவர்களிடம் ரூ.89 கோடி வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் விஜயபாஸ்கரின் கணக்காளர் சீனிவாசனிடமிருந்து கைப்பற்றப்பட்டன. வட்ட வாரியாக, வாக்காளர் வாரியாக வழங்கப்பட வேண்டிய பணம் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் விஜயபாஸ்கரின் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன’ என்று தெரிவித்திருந்தது. இது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அப்போதே பாமக வலியுறுத்தியது.

ஆனால், தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி தமிழக காவல்துறைக்குப் பரிந்துரைத்ததாகவும், அதன்படி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் ஒருவருக்குஅளித்த பதிலில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த பிறகும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்யாத நிலையில், உடனடியாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்குரைஞர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிடைத்த ஆவணம் ஒன்றில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையிலான 7 குழுக்கள் தான் பண விநியோகத்தை நடத்தியது எனக் கூறப்பட்டு இருந்தது. அதிலும் குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு 33,193 வாக்காளர்களுக்கு ரூ.13.27 கோடி கொடுத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலமைச்சரும் அமைச்சர்களும் நேரடியாக பணம் கொடுத்தனர் என்பதற்கு இதைவிட ஆதாரம் எதுவும் தேவையில்லை.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி தமிழக ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் வெளிப்படையாக ஆணையிட வேண்டும். அவ்வாறு வழக்குப் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாகவே, அந்த வழக்குகளின் விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon