மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 18 ஜன 2020

நாடோடியின் நாட்குறிப்புகள் - 31 - சாரு நிவேதிதா

நாடோடியின் நாட்குறிப்புகள் - 31 - சாரு நிவேதிதா

ஒரு பத்திரிகை நேர்காணலின்போது சென்னை பற்றிக் கேட்டார்கள். 1990-லிருந்து இந்த ஊரில் வசிக்கிறேன். 27 ஆண்டுகள். என் வாழ்வில் இத்தனை ஆண்டுகள் எந்த ஊரிலும் வசித்ததில்லை. ஆனாலும், இந்த ஊர் என்னிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்த ஊரில் நான் வசிப்பதாகவே எனக்குத் தெரியவில்லை. புத்தகங்களிலும் இசையிலும் உலக சினிமாவிலும் வாழும் ஒருவனை அவன் வாழும் ஊரின் physical existence எந்த அளவுக்குப் பாதித்து விட முடியும்? நான் பாரிஸுக்கு இரண்டு தடவைகளே சென்றிருந்தாலும், மொத்தமாக நான்கு மாதங்களே தங்கியிருந்தாலும் என் சொந்த ஊர் பாரிஸ்தான் என்று தோன்றுகிறது. பாரிஸ் பற்றிச் சொல்வதற்கு முன்னால் தில்லியைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

ஒரு ஊர் என்பது அதன் கலாசார ஞாபகங்கள்தானே? சென்னை என்னிடம் எப்படிப்பட்ட கலாசார ஞாபகங்களை ஏற்படுத்தியிருக்கிறது? என்னை உருவாக்கிய ஊர்கள் என்று சொன்னால் நாகூர், தஞ்சாவூர், தில்லி. இந்த மூன்றில் முக்கியமானது தில்லிதான். 1978-லிருந்து 1990 வரை தில்லி வாசம். தில்லியில் குறிப்பாக மண்டி ஹவுஸ். மண்டி ஹவுஸில்தான் எத்தனை அரங்கங்கள். நவீன நாடகங்களுக்கான அரங்கம் - ஸ்ரீராம் சென்டர்; சாகித்ய அகாதமி இருக்கும் ரவீந்திர பவன் - அங்கே உள்ள மிக அற்புதமான நூலகம்; Aifacs ஆடிட்டோரியம், சப்ரு ஹவுஸ் (இங்கேயும் ஒரு பிரமாதமான நூலகம் உள்ளது), கமானி ஆடிட்டோரியம், FICCI ஆடிட்டோரியம், மவலங்கர் ஆடிட்டோரியம், தேசிய நாடகப் பள்ளி என்று மண்டி ஹவுஸைச் சுற்றிலும் ஏகப்பட்ட கலையரங்குகள் உள்ளன. இங்கெல்லாம் ஒவ்வொரு நாளும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். மண்டி ஹவுஸிலிருந்து பகவான் தாஸ் சாலை வழியே கொஞ்சம் நடந்து போனால் பிரமாண்டமான பிரகதி மைதான். பகல் முழுவதும் அங்கே சாஸ்த்ரீய சங்கீதத்தை ஒலி பெருக்கிகளின் வழியே கேட்கலாம். மைதானம் முழுவதும் ஒலி பெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கும். மாலை ஐந்து மணி ஆனதும் இந்தி சினிமாப் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்து விடும். அதாவது, பகல் நேரம் புத்திஜீவிகளுக்கும், கலா ரசிகர்களுக்குமானது.

பிரகதி மைதானத்தில் காதம்பரி தியேட்டர் என்று ஓர் அரங்கமும் பொதுமக்களுக்கான ஒரு பெரிய திறந்தவெளி அரங்கும் உண்டு. காதம்பரி தியேட்டரில் எண்பதுகளில் பிரபலமாக இருந்த அத்தனை சாஸ்த்ரீய சங்கீதக் கலைஞர்களின் கச்சேரியையும் நேரில் கேட்டிருக்கிறேன். ஒருவரையே குறைந்த பட்சம் பத்து முறை. இரண்டு ரூபாய் மற்றும் மூன்று ரூபாய் டிக்கட். இருநூறு பேர் அமரலாம். கங்குபாய் ஹங்கல், பண்டிட் ஜஸ்ராஜ், பீம்சென் ஜோஷி, டாகர் பிரதர்ஸ், ஹரிப்ரஸாத் சௌரஸ்யா, அம்ஜத் அலிகான், ஜாகீர் ஹுஸேன், பிஸ்மில்லா கான், ராம் நாராயண் (சாரங்கி), கிஷோரி அமோங்க்கர், குமார் கந்தர்வா, மல்லிகார்ஜுன் மன்ஸூர், ஷிவ்குமார் ஷர்மா என்று ஏராளமான பேர். ஒருநாள் நல்ல மழை. அவ்வளவு கூட்டமில்லை. முன்வரிசை (மூன்று ரூபாய்) காலியாக இருக்கிறது. மேடையில் பிஸ்மில்லா கான். பின்னால் இருப்பவர்களை முன்னால் வந்து அமரச் சொன்னார். எல்லோரும் வந்து அமர்ந்தோம். எனக்கும் இன்னும் சிலருக்கும் இடமில்லை. மேடையில் வந்து தனக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்ளச் சொன்னார். மறுபேச்சு பேசாமல் போய் உட்கார்ந்தோம். கடவுள் கூப்பிடுகிறார். மறுக்கலாமா? ஒருமணி நேரம் வாசித்து விட்டு, பதினைந்து நிமிடம் பிரேக் என்றார். கழிப்பறைக்குப் போனேன். ”கெய்ஸா தா?” என்று பக்கத்திலிருந்து குரல் கேட்டது. பார்த்தால் பிஸ்மில்லா கான். அப்படியே உணர்ச்சிவசப்பட்டு அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன். நஹி நஹி நஹி என்று சொல்லி அணைத்துக் கொண்டார். இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கின்றன. எதற்கு? எப்பேர்ப்பட்ட மகா கலைஞன்! உலகமே கொண்டாடும் கலைஞன்! என்னிடம் ‘எப்படி இருந்தது வாசிப்பு?’ என்று கேட்கிறான். என்ன பணிவு, என்ன அடக்கம்! அவர் வசித்த வாரணாசியில் அவர் உயிரோடு இருக்கும் வரை சைக்கிள் ரிக்ஷாவில்தான் பயணித்தார் என்று படித்திருக்கிறேன். அந்த மனிதர் ஒரு சூஃபி ஞானி. இதுதானே ஒரு நகரத்தின் ஞாபகம்? இல்லையா? இப்படி ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் என் ஞாபகக் கிடங்குகளில் குவிந்து கிடக்கின்றன. எனக்கு ஞாபக சக்தி மிகவும் குறைவு. அப்படிப்பட்ட எனக்கே ஷிவ்குமார் ஷர்மா சந்த்தூர் என்ற அந்தக் காஷ்மீரி வாத்தியத்தை அற்புதமாகக் கையாளும் ஒவ்வொரு கணமும் என் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த இசை இதைத் தட்டச்சு செய்யும்போது என் செவிகளில் ஒலிக்கிறது. ஷிவ்குமாரின் அங்க அசைவுகளைக்கூட என்னால் நினைவில் கொண்டுவர முடிகிறது. இதேபோல் தென்னகத்தின் சங்கீதக் கலைஞர்கள். சிட்டிபாபு, எஸ்.பாலச்சந்தர், லால்குடி ஜெயராமன்... இதேபோல் நடனக் கலைஞர்கள். தப்லாவின் இசைக்கு பிர்ஜு மகராஜின் கால்களில் கட்டப்பட்டிருக்கும் சலங்கையின் ஒரே ஒரு மணி அசையும் துல்லியமான இசையை இந்த நேரத்திலும் என்னால் உணர முடிகிறது.

இது எல்லாமே பிரகதி மைதானத்தில் உள்ள காதம்பரி தியேட்டரில்தான் நடக்கும். பிரகதி மைதானம் மிகப் பிரமாண்டமான ஓர் இடம். அங்கேதான் உலகப் புத்தக விழா நடக்கும். புத்தக விழா என்றால் அதுதான். உலகத்தில் உள்ள முக்கியமான அத்தனை பதிப்பாளர்களின் ஸ்டால்களையும் இங்கே காணலாம். சென்னையில் நடக்கும் புத்தக விழாக்கள் ஆபாசமானவை. தீவுத்திடலில் நடக்கும் குழந்தைகள் மட்டுமே காணக் கூடிய பொருட்காட்சியைப் போன்றவை. சென்னை புத்தக விழாக்களில் ஒரு குடை ராட்டினத்தையும் வைத்துவிட்டால் முழுமை பெற்று விடும். இங்கே நடக்கும் புத்தக விழாக்கள் எனக்கு அந்த அளவுக்கு அருவருப்பை அளிக்கிறது. உலகத்தில் உள்ள பதிப்பாளர்களை விடுங்கள்; இந்தியாவில் உள்ள முக்கியப் பதிப்பாளர்களைக் கூட காணோம். சரியாகச் சொன்னால், ஆங்கிலப் புத்தகங்களே இல்லை. என்னைக் கட்டிவைத்து சாட்டையால் அடிக்க வேண்டும் என்று எனக்கே தோன்றுகிறது. ஏண்டா மடையா, 100 அரங்கம் இருந்தால் தமிழ் இலக்கியப் புத்தகங்களே ஐந்து அரங்கில்தான் கிடைக்கிறது; உனக்கு ஆங்கிலப் புத்தகங்கள் வேறு தேவையா, ராஸ்கல்?

1980 அல்லது 1981ஆக இருக்க வேண்டும். பிரகதி மைதானத்தில் உலகப் புத்தக விழா. ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாரோ ஒருவரின் நமஸ்தே சப்தம் கேட்டது. நமக்கு யார் நமஸ்தே சொல்லப் போகிறார்கள் என்று நிமிர்ந்து பார்த்தேன். கடைக்காரர் என் பக்கத்தில் இருந்த பெண்மணிக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். பார்த்தால் இந்திரா காந்தி. புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தவர் அவருக்கும் எனக்கும் நமஸ்தே சொன்னார். அப்போதெல்லாம் எந்தப் பாதுகாப்புப் படையும் கிடையாது. தீவிரவாதப் பிரச்னை அப்போது தலைதூக்கியிருக்கவில்லை. ஒரு சம்பவம் மிக நன்றாக நினைவில் இருக்கிறது. இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடிய நாடாளுமன்றத்தின் எதிரே நார்த் ப்ளாக் என்று அழைக்கப்படும் இடத்தில் தான் அரசு அலுவலகங்கள் உள்ளன. அங்கே உள்ள ஓர் இடம் எனக்குக் கோயில் போன்றது. என்னுடைய தில்லி நாட்களின் பெரும்பகுதியை அங்கேதான் கழித்திருக்கிறேன். அந்த இடம் சென்ட்ரல் செக்ரடேரியட் லைப்ரரி. காலையில் பத்து மணிக்குப் போனால் மாலை ஐந்து மணிக்குத்தான் வருவேன். இடையில் மதியத்தில் வெளியே வந்து தள்ளுவண்டியில் இருக்கும் கச்சோடிகளைச் சாப்பிடுவேன். ஐந்து மணிக்கு அங்கிருந்து கிளம்பி நாடாளுமன்றத்தின் வழியே போய் சென்ட்ரல் செக்ரடேரியட் பஸ் நிலையத்தில் பஸ் ஏறுவேன். அப்போது ஒருநாள் ஒரு சீக்கியர் நாடாளுமன்றத்தின் சுவரில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். உடனே போலீஸ், ‘சர்தார்ஜி, சர்தார்ஜி’ என்று கத்த, சர்தார் வெகு சாவகாசமாக, ‘எனக்கு அவசரம் பாயிஸாப், என்ன செய்ய?’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார். இப்போது இதைச் சொன்னால் கதை விடுகிறேன் என்பார்கள். நாற்பது ஆண்டுகளில் எல்லாமே தலைகீழாய் மாறி விட்டது. விமானத்தில் புகைக்க முடியாது என்று தெரியும். ஆனால், அடிக்கடி புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் அப்போதெல்லாம் விமானத்தின் கழிப்பறையில் இருந்து புகைப்பார்கள். எல்லோரும் செய்வதில்லை. சிலர் செய்து கேள்விப்பட்டிருக்கிறேன். சிகரெட், தீப்பெட்டி எல்லாம் அப்போது பாக்கெட்டில் அனுமதிக்கப்பட்ட காலம்.

அப்படிப்பட்ட பிரகதி மைதானம் இந்திரா காந்தியின் நண்பரான முகம்மது யூனுஸ் என்பவரால்தான் உருவாக்கப்பட்டது. எத்தனை ஆயிரம் கோடி இருந்தாலும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடம் சாத்தியமில்லை. ஏனென்றால், இங்கே கலை இலக்கியம் என்றால் என்னவென்றே யாருக்கும் தெரியாது. சினிமாவைத் தவிர தமிழர்கள் அறிந்த விஷயம் எதுவும் இல்லை. அதுவும் ஆகக் குப்பையான வணிக சினிமா.

அடுத்து நாடகங்கள். உலகின் அத்தனை முக்கியமான நாடகக் குழுக்களின் நாடகங்களையும் காண முடிந்தது. 1982இல் ரத்தம் திய்யத்தின் இம்ஃபால் இம்ஃபால் என்ற நாடகத்தைப் பார்த்தேன். அதன் பல காட்சிகள் இப்போதும் ஞாபகத்தில் நிற்கின்றன. கானகங்களில் வசிக்கும் ஆதிவாசிகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதால் நகரங்களுக்கு வரும் அவர்கள் பிச்சைக்காரர்களாய் மாறுவது பற்றிய நாடகம். கடைசிக் காட்சியில் ஒரு ஆதிவாசி (அவன் தன்னுடைய காட்டில் ஒரு ராஜாவைப் போல் வாழ்ந்தவன்) பசி தாங்க முடியாமல் ஒரு தேநீர்க் கடையில் தேநீர் கேட்கிறான். காசு கேட்கிறான் கடைக்காரன். இவனோ காசையே பார்த்ததில்லை. கூட்டம் வரும் நேரத்தில் வியாபாரத்தைக் கெடுக்கும் அவன் மீது சுடுநீரைக் கொட்டுகிறான் கடைக்காரன். அப்போது கோரஸ் ஒலிக்கிறது. ஸோஃபாக்ளிஸின் மெடியா நாடகத்தில் மெடியா தன் கணவனையும் கணவன் மணந்துகொண்ட ராணியின் அரண்மனையையும் எரித்த பிறகு கேட்கும் கோரஸ் ஒரு விதம் என்றால் இம்ஃபால் இம்ஃபாலின் கோரஸ் இன்னொரு விதம். இயலாமைக்கும், ஆவேச வெறிக்கும் இடையிலான வித்தியாசம்.

வெறும் பன்னிரண்டே ஆண்டுகளில் இப்படி என்னுள் லட்சக்கணக்கான பதிவுகள் நிகழ்ந்திருக்கின்றன. சென்னையில்? இங்கே நடக்கும் கலாசார நிகழ்வுகள் என்னென்ன? மார்கழி மாதத்தில் மட்டுமே நடக்கும் இசைக் கச்சேரிகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை. அதுவும் மிக எரிச்சலூட்டக்கூடிய அளவில் மேட்டுக்குடியினருக்கே உரிய ஒன்றாக நடந்து முடிகிறது. கட்டணங்களும் அதிர்ச்சியூட்டுகின்றன. இதையெல்லாம் விட முக்கியமான தடை என்னவென்றால், இந்த இசை நிகழ்ச்சிகளை ரசிப்பவர்கள் மற்ற துறைகளில் philistines-ஆக இருக்கிறார்கள். இவர்கள் பார்ப்பது விஜய் சினிமா, ஜோக்குத் தோரண நாடகம். இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத மௌடீகம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளாக இருந்த சி.சு.செல்லப்பா, க.நா.சு., கு.ப.ரா., தி.ஜ.ரங்கநாதன், தி.ஜானகிராமன், மௌனி, ந.பிச்சமூர்த்தி போன்ற அனைவருமே பிராமணர்கள். ஆனால், இன்று அந்தக் குலத்தினர் தங்கள் மொழியையும் தேசத்தையும் மறந்து அமெரிக்கக் குடியேறிகளாக மாறி இங்கிருந்து ஓடிவிட்டனர். இசை மட்டுமே இவர்களின் பிதுரார்ஜித எச்சமாக குடல்வால் போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. வருஷம் பூராவும் சாக்கடையை சந்தனமாகப் பூசிக் கொண்டிருப்பேன், மார்கழியில் மட்டும் நிஜ சந்தனத்தைப் பூசிக் கொள்வேன் என்று ஒருத்தன் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது தமிழ்நாட்டில் சாஸ்த்ரீய சங்கீத ரசிகர்களின் நிலை.

தில்லியில் ஹிந்துஸ்தானி, கர்னாடக சங்கீதம் மட்டும் அல்ல; மேற்கத்திய சங்கீதம், நவீன இசை எல்லாமே காணக் கிடைக்கும். பீத்தோவனையும் வாக்னரையும், மொஸார்ட்டையும் ரசிக்கக் கற்றுக் கொண்டது அங்கேதான். அது மட்டும் அல்ல; ஒருநாள் லோதி ரோட்டில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் சென்ட்டரில் ஓர் இசை நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். என்னுடைய பிரபலமான நாவலான ஸீரோ டிகிரியின் உள் கட்டமைப்பை, அதன் ஜீவனை நிர்ணயித்தது அந்த நிகழ்ச்சிதான் என்று சொல்ல வேண்டும். அவர் பெயர் Iannis Xenakis. இசை என்று சொன்னால் நம் மனதில் என்னவெல்லாம் தோன்றுமோ அதையெல்லாம் ஒட்டுமொத்தமாக மாற்றக் கூடியது அயானிஸ் ஸெனாகிஸின் இசை. இவரது இசையில் ஒலி மட்டும் அல்ல; ஒளியும் உண்டு. நூற்றுக்கணக்கான ஜியோமித கோணங்களைத் தரக் கூடிய வண்ணக் கலவைகளோடு கூடிய cosmic இசை இவருடையது. பின்வரும் சுட்டியில் அவரது இசையை நீங்கள் கேட்கலாம்.

இதன் தொடர்ச்சி அடுத்த வாரம்....

கட்டுரையாளர் குறிப்பு: சாரு நிவேதிதா

புகைப்படம்: பிரபு காளிதாஸ்

தமிழைவிட மலையாள இலக்கிய உலகில் பிரசித்தமான சாரு நிவேதிதா, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆங்கில இலக்கிய உலகில் பிரபலமாக இருக்கிறார். தமிழ்க் கலாசாரத்தை ஆங்கில உலகுக்கு அறிமுகம் செய்யவேண்டியது இப்போதைய அவசரமான தேவை என்று கருதும் சாரு, ஏஷியன் ஏஜ் ஆங்கில தினசரியில் மூன்று ஆண்டுகள் எழுதிய பின்னர் இப்போது, லண்டனிலிருந்து வெளிவரும் Art Review Asia என்ற பத்திரிகையில் Notes From Madras என்ற தொடரை எழுதி வருகிறார். தமிழில் ஸீரோ டிகிரி, ராஸ லீலா, எக்ஸைல் போன்ற நாவல்களும் பல கட்டுரை தொகுதிகளும் எழுதியிருக்கிறார்.

திங்கள், 19 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon