மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

அரங்கத்து அமுதனாரின் அந்தாதி!

 அரங்கத்து அமுதனாரின் அந்தாதி!

திருவரங்கத்து அமுதனாரிடம் இருந்த ஸ்ரீரங்கம் கோயில் சாவியும் நிர்வாக உரிமையும் ராமானுஜரிடம் எப்படி வந்தது என்று பார்த்தோம்.

திருவரங்கத்து அமுதனாரிடம் இருந்த ஸ்ரீரங்கம் கோயில் சாவியைப் பெற்றுக் கொண்டு கூரத்தாழ்வான் தனது ஆசாரியரான ராமானுஜரை சேரன் மடத்தில் வந்து சந்தித்து அவரிடம் சாவியை ஒப்படைத்தார்.

அப்போதுதான் சிஷ்யர்களுக்கு புரிந்தது, ‘’ராமானுஜர் ஏன் திருவரங்கத்து அமுதனாரின் இல்லத்துக்கு கூரத்தாழ்வானை அனுப்பினார்’ என்று.

கொஞ்சநேரம் ஆனது... கூரத்தாழ்வானைத் தொடர்ந்து அங்கே வந்தது திருவரங்கத்து அமுதனார்தான். நேராக வந்து ராமானுஜரை சேவித்தவர்,

‘’என்னை மன்னிக்க வேண்டும். கோயிலில் தாங்கள் நிகழ்த்த முற்பட்ட சீர்திருத்தங்களுக்கு நான் இத்தனை காலம் இடையூறாக இருந்துவிட்டேன். இப்போது என் தவறை உணர்ந்தேன். நானே மனமுவந்து முன்பே தங்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். இப்போது இந்த சூழலில் கொடுப்பதற்கு வருந்துகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்’’ என்றார் திருவரங்கத்து அமுதனார். அன்றே ராமானுஜரின் சிஷ்யனுமானார்.

மேலும். .ராமானுஜருக்கு தான் இதுநாள் வரை இழைத்த பாவங்களுக்கு பரிகாரம் செய்வேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

கோயில் நிர்வாகம் ராமானுஜர் கைக்கு வந்தது. ஆனாலும் ராமானுஜர் யாருக்கு என்ன உரிமை கொடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து தெளிவாக திட்டங்களை வரையறுத்தார்.

அதுவரை திருவரங்கத்து அமுதனார் செய்து வந்த வேதம், புராணம் வாசிக்கும் உரிமையை கூரத்தாழ்வானுக்கும் அவரது பரம்பரைக்கும் கொடுத்தார் ராமானுஜர். திவ்ய பிரபந்தம் வாசிக்கும் உரிமையை அரையர்களுக்கு கொடுத்தார். திவ்ய பிரபந்தத்திலே இயற்பா என்றுள்ளது. அதை வாசிக்கும் உரிமையை திருவரங்கத்து அமுதனாரிடம் கொடுத்தார் ராமானுஜர். அரையர் சேவை, இயற்பா ஆகியவை பற்றி அடுத்தடுத்து நாம் பார்ப்போம்.

ராமானுஜர் கைக்கு ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் வந்த போதே... ராமானுஜ நூற்றந்தாதியும் உருவானது.

ஆம்.... ராமானுஜருக்கு இதுவரை தான் இழைத்த பாவங்களுக்கு பரிகாரம் செய்யப் போவதாக சொல்லிச் சென்றார் அல்லவா திருவரங்கத்து அமுதனார். ராமானுஜரைப் பற்றி அழகுத் தமிழில் அந்தாதிப் பாடல்களை இயற்றிக் கொண்டு மீண்டும் ராமானுஜரிடம் வந்தார்.

‘’சுவாமி... நான் தங்களைப் பற்றி சில அந்தாதிகளை இயற்றியிருக்கிறேன் பார்க்க வேணும்’’ என்று ரமானுஜரிடம் ஓலை சுவடியை கொடுத்தார். அதைப் பார்த்த ராமானுஜர், நான் தொண்டு செய்ய வந்துள்ளேனே அன்றி போற்றி கேட்க வரவில்லை என்றபடியே அந்த ஓலையை கிழித்துப் போட்டுவிட்டார். வருத்தத்துடன் திரும்பச் சென்ற திருவரங்கத்து அமுதனார் மீண்டும் ராமானுஜர் பற்றி எழுதிக் கொண்டு வந்தார். அதையும் கிழித்துப் போட்டுவிட்டார் ராமானுஜர்.

அப்போது அவரிடம் சொன்னார், ‘’அடியேனுக்கு முன்னே அநேகர் தொண்டாற்றியுள்ளனர். எம்பெருமான், ஆழ்வார்கள் ஆகியோர் முன் நான் ஒன்றும் கிடையாது போய்வாரும்’ என்றார்.

இதையே பிடித்துக் கொண்ட திருவரங்கத்து அமுதனார்... முதல் இரண்டு வரிகளில் பெருமாள், ஆழ்வார்கள், ஆசாரியர்கள் புகழையும் அடுத்த இரு வரிகளில் ராமானுஜரின் புகழையும் பொருத்தி வைத்து அந்தாதிகளை இயற்றினார்.

இம்முறை நேரடியாக ராமானுஜரிடம் சென்று பாடிக் காட்டாமல் வேறொரு திட்டமிட்டார். ராமானுஜரின் சிஷ்யர்களை ஸ்ரீரங்கம் கோயிலில் இருக்கும் ஒரு சந்நிதிக்கு வர சொல்லி அங்கே வைத்து எல்லாருக்கும் தனது அந்தாதிப் பாடல்களை அரங்கேற்றம் செய்து காட்டினார். அமுதனாரின் தமிழ் வடமொழிப் புலமையை இந்த பாடல்கள் பறைசாற்றின.

முதல் பாடல்...

பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த

பாமன்னு மாறனடி பணிந்துய்ந்தவன் பல்கலையோர்

தாம் மன்ன வந்தவிராமானுசன் சரணாரவிந்தம்

நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே...

அதாவது... திருமகள் என்றும் வாசம் செய்யும் மார்பை உடையவர் திருமால். திருமாலின் புகழைப் போற்றிம அவரது அருளால் திருவாய்மொழியை படைத்தவர் நம்மாழ்வார். அத்தகைய நம்மாழ்வாரை அண்டி நின்று தினம் அவரது திருவடிகளை சேவிக்கும் ராமானுஜரின் திருவடிகளை நாம் சேவிப்போம்... நம் நெஞ்சமெல்லாம் ராமானுஜரின் நாமத்தை சொல்லட்டும்.

என்பதுதான் முதல் அந்தாதியின் அர்த்தம்.

இதை பெரிய கோயில் நம்பிகள் வாசிக்க... ராமானுஜரின் சிஷ்யர்கள் அற்புதமாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். முதல் பாடலுக்கே இப்படியா என்று தொடர்ந்து தனது அனைத்து அந்தாதிகளையும் பாடினார் பெரிய கோயில் நம்பிகள். கேட்டவர்கள் எல்லாம்,

‘நல்ல வேளை சுவாமி... நமது ஆசாரியர் கேட்டபோதே தாங்கள் பெரியகோயில் சாவியை அவரிடம் கொடுத்திருந்தால் இன்றைக்கு இப்படிப்பட்ட அரும்பெரும் ராமானுஜ நூற்றந்தாதி எங்களுக்குக் கிடைத்திருக்காது’’ என்று புகழ்ந்தனர்.

ராமானுஜ நூற்றந்தாதி என்று அழைக்கப்பட்டாலும் அதில் மொத்தம் 1௦8 பாடல்கள் உண்டு. அந்த வகையில் 1௦5 ஆவது பாடலை பெரியகோயில் நம்பிகள் பாடிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக ராமானுஜர் வந்திருக்கிறார்.

என்ன கூட்டமாக இருக்கிறது என்று காது கொடுத்தபோதுதான் இந்த பாடல்களைக் கேட்டார் ராமானுஜர். அவர் சந்நிதிக்குள் நுழைந்ததும் மீதமுள்ள மூன்று அந்தாதிகளும் இரு முறை வாசிக்கப்பட்டன.

ராமானுஜரால் இம்முறை மறுக்க முடியவில்லை. காரணம்... இந்த அந்தாதியின் ஒவ்வொரு பாடலும் பெருமாள், ஆழ்வார்கள், ஆசாரியர்களை தொட்டு அதன் பின் தன்னைப் பற்றி சொல்வதால் ராமானுஜர் மனமுவந்து ஏற்றுக் கொண்டார். இப்போதுதான் அவர் பெரிய நம்பிகளுக்கு அரங்கத்து அமுதனார் என்றும் பெயர் சூட்டினார்.

உள்ளபடியே ராமானுஜர் கேட்டபோதே பெரிய கோயில் நம்பிகள் திருவரங்க கோயில் சாவியைக் கொடுத்திருந்தால்... இந்த ராமானுஜ நூற்றந்தாதி என்ற அமுத கானம் நமக்குக் கிடைத்திருகாது. அதற்காகத்தான் அரங்கனே இப்படி ஒரு திருவிளையாடலை நடத்தியிருக்கிறார் போலும்.

இதுபோன்ற வைணவ இலக்கியங்களையும், பக்தியையும் குழைத்து தமிழின் வெகு ஜனத்துக்குக் கொண்டு செல்வதில் ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் நிறுவனர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் அவர்களின் பங்கு அளவிட முடியாதது. வைணவச் செம்மல் டாக்டர் ஜெகத்ரட்சகனின் ஆதரவோடு ராமானுஜரின் ஸ்ரீரங்க சீர்திருத்தங்களை தொடர்ந்து காண்போம்.

விளம்பர பகுதி

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon