மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை: பன்னீர் அணி, ஸ்டாலின் வரவேற்பு!

முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை: பன்னீர் அணி, ஸ்டாலின் வரவேற்பு!

முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை: பன்னீர் அணி, ஸ்டாலின் வரவேற்பு!

‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது’ என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் பன்னீர் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பாக வழக்கறிஞர் வைரக்கண்ணன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்த தேர்தல் ஆணையம் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் வைரக்கண்ணன் தாக்கல் செய்துள்ள வழக்கு நாளை ஜூன் 19ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதை பன்னீர் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து இன்று ஜூன் 18ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் குதிரை பேர குற்றச்சாட்டு விரக்தியில் பேசுவது போல உள்ளது. எங்கள் அணியின் எம்.எல்.ஏ. சரவணன் பேசியதாக வெளியிடப்பட்ட வீடியோ மார்பிங் செய்யப்பட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பதிவு செய்தவுடனே வெளிவிடாமல், மூன்று மாதங்கள் கழித்து வெளியிட வேண்டிய அவசியமென்ன? எனவே இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. பாஜக-வின் கருவியாக நாங்கள் ஒருபோதும் இருந்ததில்லை. இன்னும் மூன்று மாதத்தில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக மாறும் என்று தமிழிசை கூறியிருப்பது, அக்கட்சியில் இதுவரை பலவீனத்தில் இருந்து வருவதைக் காட்டுகிறது. மேலும் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்க எங்களைவிட அதிகமான பிரமாணப் பத்திரங்களை எடப்பாடி பழனிசாமி அணி தாக்கல் செய்திருந்தாலும், எத்தனை பேர் என்பதை குறிப்பிடவில்லை. அதில் பெரிய தவறுகள் நடந்துள்ளன” என்று தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இவ்விவகாரம் தொடர்பாக வைரக்கண்ணன் என்ற வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்ற தகவலின் பேரில், பணப்பட்டுவாடா புகாரில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜூ, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய, மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஏப்ரல் 18ஆம் தேதியே தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த உத்தரவு குறித்து மூன்று மாதங்கள் ஆன பின்பும் வழக்குப்பதிவு செய்யாதது கண்டனத்துக்குரியதாகும். மேலும், இது தேர்தல் ஆணையத்தை அவமதிக்கும் செயலாகும். மாநிலத் தேர்தல் அதிகாரி மற்றும் தலைமைச் செயலர் உள்ளிட்டோர் தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்றத் தவறினால், திமுக சார்பில் வழக்கு தொடரப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon