மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

என்.எல்.சி-யில் ஐந்து லட்சம் டன் நிலக்கரி எரிந்து வீண்? சிபிஐ விசாரணை கோரும் சிஐடியு!

என்.எல்.சி-யில் ஐந்து லட்சம் டன் நிலக்கரி எரிந்து வீண்? சிபிஐ விசாரணை கோரும் சிஐடியு!

‘நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்தில் குவித்துவைக்கப்பட்டுள்ள ஐந்து லட்சம் டன் நிலக்கரி எரிந்து சாம்பலாகியுள்ளது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று சிஐடியு பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் இன்று ஜூன் 18ஆம் தேதி வலியுறுத்தியுள்ளார்.

சிஐடியு தொழிற்சங்கத்தின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி எரிந்து சாம்பாலானது தொடர்பாக மத்திய அரசின் சிபிஐ விசாரணை கோரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “என்.எல்.சி. சுரங்கத்தில் சேமித்து வைக்கப்பட்டிந்த பழுப்பு நிலக்கரி கடந்த ஒருவார காலமாக எரிந்துகொண்டிருக்கிறது. இதில் சுமார் ஐந்து லட்சம் டன் நிலக்கரி எரிந்து சாம்பலாகி உள்ளன. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தற்செயலாக ஏற்பட்ட விபத்தாகக் கருதிவிட முடியாது.

மின் உற்பத்திக்குத் தேவைக்கும் அதிகமாகப் பழுப்பு நிலக்கரியை வெட்டி குவித்து மேல்மண் நீக்க பணிகளை ஒப்பந்ததாரர்களிடம் விடப்பட்டதால்தான் அதிகமான உற்பத்தி என பறைசாற்றியது நிர்வாகம். மீண்டும் நிலக்கரியை வெட்டியெடுக்க வேண்டுமானால் குவித்து வைத்துள்ள பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்த வாய்ப்பில்லாதபோது வேண்டுமென்றே மீண்டும் ஒப்பந்தம் விடுவதற்கு ஏதுவாக சேமித்து வைக்கப்பட்ட பழுப்பு நிலக்கரி எரியவிடப்பட்டதோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தும்வகையில் கடந்த மார்ச் மாதம் இதேபோன்று ஒரு பகுதி நிலக்கரி எரிந்துள்ளது. சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டிய பின்பும் என்எல்சி நிர்வாகம் விழித்துக்கொள்ளவில்லை. பழுப்பு நிலக்கரி எரியாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அதை செய்திருந்தால் இப்போது ஏற்பட்டுள்ள பெரும் இழப்பை தவிர்த்திருக்க முடியும்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நெய்வேலி நிறுவனத்துக்குத் தேவைக்கும் மேலாக நிலக்கரி உற்பத்தி செய்ய, திறந்தவெளி சுரங்கங்களில் நவீனமயப்படுத்தப்பட்ட கன்வேயர்கள், மண்வாரி இயந்திரங்களைப் பயன்படுத்தி சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளது.

தற்போது என்.எல்.சி. நிர்வாக பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அதிக உற்பத்தி செய்யப்போவதாகக்கூறி இயந்திரங்களை முழுமையாக பயன்படுத்தாமல் மேல்மண் நீக்கத்தைத் தனியாரிடம் தாரை வார்த்தனர். அப்போதே சி.ஐ.டி.யு. இத்தகைய தவறான நடவடிக்கையைக் கண்டித்தது. ஆனாலும், நிர்வாகம் தனது நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.

தேவைக்கும் அதிகமாக பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து எரியவிடுவது நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதாகும். இப்படி எரியவிடுவதன் மூலம் மீண்டும் நிலக்கரியை மண்ணுக்கு அடியில் இருந்து எடுக்க ஒப்பந்தத்தை நீட்டிக்கவோ, அதிகப்படுத்தவோ அல்லது தனியாரிடம் விடுவதற்கான உள்நோக்கம் உள்ளதாகவே சந்தேகப்பட வேண்டியுள்ளது.

இந்தச் சம்பவத்தின் உண்மைத்தன்மையைக் கண்டறிய மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என சிஐடியு தமிழ் மாநிலக்குழு வலியுறுத்துகிறது” என்று ஜி.சுகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

என்.எல்.சி.யில் சேமித்துவைக்கப்பட்ட நிலக்கரி ஒருவார காலமாக எரிந்து வருவது குறித்து அங்கே என்ன நடக்கிறது என்று கேட்பதற்கு, நாம் சென்னை என்.எல்.சி. அலுவலகத்தை தொடர்புகொண்டோம். அவர்கள் இது தொடர்பாக தெரிந்துகொள்ள ஒரு தொலைபேசி எண்ணை அளித்தார்கள். அந்த எண்ணில் பலமுறை முயற்சித்தும் தொடர்புகொள்ள முடியவில்லை.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon