மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

விவசாயமும் இல்லை வேலைவாய்ப்பும் இல்லை: ப.சிதம்பரம்

விவசாயமும் இல்லை வேலைவாய்ப்பும் இல்லை: ப.சிதம்பரம்

இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதே இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல மாநிலங்களில் விவசாயிகள் பிரச்னை தலைதூக்கியுள்ளது. தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் பிரச்னைகள் தீவிரமடைந்தன. மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் வன்முறையில் முடிந்ததால், அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 விவசாயிகள் உயிரிழந்தனர். பயிர்களுக்கு உரிய விலை வழங்கப்படாததால், கடன்களை அடைக்க முடியாமல் சில விவசாயிகள் தற்கொலையும் செய்துள்ளனர். இப்படி விவசாயிகள் பிரச்னை நாடு முழுவதும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த பிரச்னை பற்றி பேசுகையில், “நானும் ஒரு விவசாயியின் மகன். வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளேன். மோடி அரசு விவசாயிகளுக்கான அரசு. விவசாயிகளுக்கு ஆதரவாகவே அரசு செயல்படும்” என அவர் தெரிவித்திருந்தார்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி பற்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, “விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடும் மாநில அரசுகள், அந்த கடன்களை அவர்களே தள்ளுபடி செய்துவிட வேண்டும். விவசாயிகள் கடன் தள்ளுபடி விவகாரத்தில் மத்திய அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை” என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாட்டில் நிலவும் விவசாயிகள் பிரச்னை மற்றும் வேலையின்மை பற்றி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) விவசாயத்துறையின் பங்கு சரிந்துகொண்டே போகிறது. ஆனாலும் இந்தியாவில் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கும் துறை விவசாயத்துறைதான். ஆனால் இந்த அடிப்படை உண்மையை மத்திய அரசு மறந்துவிட்டது. விவசாயத்துறை மத்திய அரசின் சிண்ட்ரெல்லா கதையாக ஆகிவிட்டது. விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 50 சதவிகிதத்துக்கும் மேல் உயர்த்தவேண்டும் என்ற எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரை செயல்படுத்தப்படும் என பாஜக உறுதியளித்திருந்தது. ஆனால் இந்த வாக்குறுதியை பாஜக செயல்படுத்த தவறிவிட்டது. பாஜக அரசின் முதல் மூன்று வருடங்களில், விவசாயிகளுக்கான நியாயமான விலையைக்கூட தராமல் விவசாயிகளை அரசு ஏமாற்றியுள்ளது. இளைஞர்களுக்கு விவசாயம் செய்ய வழிவகை இல்லை. அவர்களால் நிலத்தில் விவசாயம் செய்யமுடிவதில்லை. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதில்லை” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon