மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

சென்னையில் நித்யானந்தா சீடர்களை விரட்டியடித்த பொதுமக்கள்!

சென்னையில் நித்யானந்தா சீடர்களை விரட்டியடித்த பொதுமக்கள்!

சென்னை அருகே பல்லாவரத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்துக் கண்டெய்னர், கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த நித்யானந்தாவின் சீடர்களை அப்பகுதி பொதுமக்கள் இன்று ஜூன் 18ஆம் தேதி கூடாரங்களைப் பிரித்து விரட்டியடித்தனர்.

சென்னை பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு பச்சையம்மன் கோயில் தெருவில் கிருஷ்ணன் என்பவரும் அவரது உறவினர்களும் கடந்த 40 ஆண்டுகளாகத் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர். 2.19 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடம் அரசு நிலம். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.30 கோடிக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த இடத்தை ராமநாதன் என்பவர் தன்னுடையது என்று கூறிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது அந்த இடம் தனக்குதான் சொந்தம் என்பதற்கான போதுமான ஆதாரத்தை ராமநாதன் சமர்ப்பிக்காததால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து, அந்த இடத்தில் கிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மே 16ஆம் தேதி பல்லாவரம் பச்சையம்மன் கோயில் தெருவில் உள்ள குறிப்பிட்ட அந்த இடத்துக்கு நித்யானந்தாவின் சீடர்களுடன் சென்ற நடிகை ரஞ்சிதா, கிருஷ்ணனிடம் இந்த இடம் ராமநாதனின் மகளுக்குச் சொந்தமானது. அவர் எங்கள் மடத்தில் நித்யானந்தாவின் சீடராகச் சேர்ந்துள்ளார். இந்த இடத்தை நித்யானந்தாவின் மடத்துக்கு எழுதிக் கொடுத்துள்ளார். அதனால், நீங்கள் உடனடியாக இந்த இடத்தைவிட்டுக் காலி செய்ய வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இது தொடர்பாகக் கிருஷ்ணன் மற்றும் நடிகை ரஞ்சிதா இருதரப்பினரும் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, அந்த இடத்தில், சில நாட்களாக ராமநாதனின் மகள் வள்ளி தலைமையில் நித்யானந்தாவின் சீடர்கள் சிலர், கண்டெய்னர் மற்றும் கூடாரங்களை அமைத்து முகாமிட்டுள்ளனர். மேலும், இந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக அப்பகுதியில் குடியிருக்கும் கிருஷ்ணன் உள்பட 17 குடும்பத்தினருக்கும் வள்ளிக்கும் இடையே கடுமையான பிரச்னை ஏற்பட்டுவந்தது.

இந்தப் பிரச்னை தொடர்பாகக் கடந்த ஜூன் 6ஆம் தேதி பல்லாவரம் வட்டாட்சியர் முன்னிலையில் இருதரப்பினருக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தையில், இந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்படும். அப்போது தங்கள் தரப்பில் இருந்து உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று வட்டாட்சியர் கேட்டுக்கொண்டார்.

இதன் பிறகு, பிரச்னைக்குரிய இடத்தில் அப்பகுதியில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்திவந்த பொதுப் பாதையில் நித்யானந்தாவின் சீடர்கள் ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு ஜூன் 13ஆம் தேதி சுவர் எழுப்பும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதி மக்களுக்கும் நித்யானந்தா சீடர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது, பல்லாவரம் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திச் சமாதானம் செய்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து அந்த இடத்தில் கண்டெய்னர் குடியிருப்பு மற்றும் கூடாரங்களை அமைத்துத் தங்கியிருந்த நித்யானந்தாவின் சீடர்கள், ஜூன் 18ஆம் தேதி காலை அந்த வழியே சென்ற பெண்களை ஆபாச வார்த்தைகளால் தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு நித்யானந்தா சீடர்கள் அமைத்திருந்த தகரக் கூரை குடிசையைப் பிரித்து எறிந்தனர். நித்யானந்தா சீடர்கள் தங்கியிருந்த கண்டெய்னர் குடியிருப்புகள் மீது கற்கள் வீசித் தாக்கினர். மேலும், நித்யானந்தா சீடர்கள் கொண்டுவந்து நிறுத்தியிருந்த இரண்டு கார்களை அடித்து நொறுக்கிய மக்கள் அவற்றைத் தலைகீழாகப் புரட்டிக் கவிழ்த்தனர். இந்தத் தாக்குதலால் பயந்துபோன நித்யானந்த சீடர்கள் கண்டெய்னர்களுக்குள் சென்று பூட்டிக்கொண்டு பதுங்கிக்கொண்டனர்.

இந்தத் தாக்குதல் குறித்துத் தகவல் அறிந்து வந்து தடுத்த போலீஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்தத் தாக்குதலின்போது பச்சையம்மன் கோயில் தெரு பகுதியில் குடியிருக்கும் பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிதியானந்தா சீடர்கள் எங்கள் பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை வழி மறித்து ஆக்ரமித்து உள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவ்வழியாகச் செல்லும் பெண்களை ஆபாசமாகத் திட்டுகின்றனர். நித்யானந்தா சீடர்களால் இங்குள்ள பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. அதனால், நாங்கள் அவர்களை ஒன்று சேர்ந்து விரட்டுகிறோம் என்று கூறினார்.

அண்மையில், திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலையை நிதியானந்தா சீடர்கள் ஆக்ரமித்து குடிசைகளை அமைத்து பூஜைகள் செய்து வந்தனர். அரசு நிலமான பவழக்குன்று மலையை ஆக்ரமித்த நித்யானந்தா சீடர்களைத் திருவண்ணாமலை பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேர்ந்து போராட்டம் நடத்தி அரசு அதிகாரிகலின் உதவியுடன் விரட்டியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon