சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் திரையரங்குகளின் எண்ணிக்கை என்பது குறைவாகவே உள்ளதாகவும் இதனால் சர்வதேச புதுமை குறியீட்டு பட்டியலில் இந்தியா பின் தங்கியுள்ளது என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுமைக்கான அரசாங்கத்தின் பணியகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, இந்தியா முழுவதிலும் புதிய திரையரங்குகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். குறிப்பாகச் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் திரையரங்குகளைத் திறக்க வேண்டும். ஒற்றைத் திரை திரையரங்குகளை மல்டிபிளஸ் திரை வளாகங்களாக மாற்றும் வகையில் அரசாங்கம் ஊக்கமளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சர்வதேச புதுமை குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை உயரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டுக்கான சர்வதேச புதுமை குறியீட்டு பட்டியலில் மொத்தமுள்ள 128 நாடுகளில் இந்தியா 54வது இடத்தை பிடித்தது. 2015ல் இந்தியாவின் இடம் 65ஆக இருந்தது. 2017ம் ஆண்டில் 130 நாடுகளில் 60வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
இந்தியாவில் அதிகளவு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டாலும் திரையரங்குகளின் எண்ணிக்கை என்பது குறைவாகவே உள்ளது.
இது தொடர்பாக திரையரங்க துறையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், திரையரங்க துறைக்கு அரசாங்கம் உதவ முன்வரவேண்டும்.. ஏனென்றால் அதிகளவு முதலீட்டைக் கவரும் துறையாகவும், வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாகவும் இது உள்ளது என்று தெரிவித்தார். மல்டிபிளக்ஸ் திரைவளாகங்கள் தொடங்குவதற்கு அரசாங்கம் வரி சலுகை வழங்கவேண்டும்.ஒற்றைத் திரை அரங்குகள் மறுமலர்ச்சி அடையவும் அரசாங்கம் உதவவேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உத்தரபிரதேச திரைப்பட வளர்ச்சி குழுவின் துணைத் தலைவர் கவுரவ் திவேதி கூறுகையில், அனைத்து மாநில அரசுகளுக்குத் திரையரங்கம் தொடர்பாக குறிப்பிடத்தக்க கொள்கைகள் வகுக்க வேண்டும். வரிச் சலுகைகளையும் வழங்க வேண்டும். அப்போது தான் ஏராளமானோர் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் திரையரங்கம் அமைக்க ஆர்வம் காட்டுவார்கள். சர்வதேச அளவோடு ஒப்பிடும்போது இந்தியாவில் திரையரங்களின் அடர்த்தி என்பது குறைவாகவே உள்ளது. அதாவது, 10 லட்சம் பேருக்கு 10 திரையரங்கங்களே உள்ளன. இது அமெரிக்காவில் 124 ஆகவும் சீனாவில் 90 ஆகவும் உள்ளன.
டிக்கெட் விற்பனைக்கு மற்றும் விலை உயர்வுக்குத் திரையரங்க கட்டமைப்பு என்பது அடிப்படையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் அமீர்கான் கூடத் தனது கருத்தைக் கூறியிருந்தார். அதில், பொழுதுபோக்கு தொழிலை முன்னேற்றுவதில் சீனா அதிகம் ஆர்வம் காட்டுகிறது. இந்தியாவும் இவ்வாறு செய்யும் என நம்புகிறேன். சீனாவில் 45 ஆயிரம் திரையரங்குகள் உள்ளன. ஆனால் இந்தியாவிலோ 9 ஆயிரம் திரையரங்குகள் மட்டுமே உள்ளன. குறைந்த அளவிலேயே திரையரங்குகள் உள்ளதால் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்களை வெளியிட முடியவில்லை. இதனால் விற்பனை பாதிக்கிறது. எனவே இந்தியாவில் அதிக திரையரங்குகளை உருவாக்கவேண்டும். இது இந்திய திரைத்துறைக்கு உதவும் என்று தெரிவித்திருந்தார்.
அதேவேளையில் திரைப்படங்கள் வெளியான சிறிது நேரத்திலேயே , திருட்டி வி.சி.டி. தயாரிக்கப்படுவதும் இணையத்தில் வெளியிடப்படுவதும் திரைத்துறை மற்றும் திரையரங்கு துறைக்குப் பின்னடைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.