மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தொடர வேண்டுமா என்பதைப் பற்றி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஜூன் 18ஆம் தேதி ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ மீன் வலை, ஜவுளிகளுக்கான சாயங்கள், கையால் செய்யப்பட்ட தீப்பெட்டி, நகைகள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரியைக் குறைக்க மத்திய தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மேலும் நீடிக்க வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஸ்டாலின் அதைத் தீர்மானிக்க முடியாது.

ஜனநாயகத்தின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், ஆட்டுக்குத் தாடியா, நாட்டுக்கு கவர்னர் தேவையா என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள். 356-ஐ ஒழிக்க வேண்டும் என்று கூறி வந்தவர்கள், தற்போது அதையே வலியுறுத்தியுள்ளார்கள். இதில், அவர்களது சுயநலம் தெளிவாகத் தெரிகிறது. நான் ஏற்கனவே கூறியதைப் போல் ஸ்டாலினின் முதல்வர் கனவு தான் இவ்வாறு அவரை செய்யத் தூண்டுகிறது. எங்களிடம் 123 சட்டமன்ற உறுப்பினர்கள் நிலையாக உள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழி காட்டுதலின் பேரில், எடப்பாடிப் பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தற்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை. அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடுமையான வறட்சி நிலவிய போதும் கூட அதை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கிறோம். மக்கள் பாராட்டுகிற அரசாக உள்ளது. எனவே நிலைமை இப்படி இருக்க ஸ்டாலின் ஜனநாயக விரோதமாகக் கருத்தை தெரிவித்து வருகிறார். ஜனாதிபதி தேர்தல் குறித்து அனைத்துத் தலைமை மற்றும் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon