மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

அதிரடி தள்ளுபடி வழங்கும் நிறுவனங்கள்!

நாடு முழுவதும் வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமலுக்கு வருகிறது. இதற்கு இன்னும் 13 நாட்கேளே உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறை வருகிற ஜூன் 30ஆம் தேதியோடு முடிவடைகிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பில் வரிக்கட்டணம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சில பொருள்களுக்கு தற்போது உள்ளதை விட குறைவான வரியும், சில பொருட்களுக்கு கூடுதல் வரியும் விதிக்கப்பட்டு உள்ளது. உதாரணமாக, அந்தந்த மாநிலங்களின், 'வாட்' வரியை பொறுத்து, தற்போது ஆயத்த ஆடைகளுக்கான அதிகபட்ச வரி, 8 சதவீதமாக உள்ளது. ஜி.எஸ்.டி.,யில், 1,000 ரூபாய்க்கு உட்பட்ட ஆயத்த ஆடைகளுக்கு, 5 சதவிகிதமும், அதற்கு மேற்பட்ட தொகைக்கு 12 சதவிகித வரியும் போடப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், பல நிறுவனங்கள், புதிய வரி விதிப்பிற்கு மாறுவதற்கு முன், தள்ளுபடி மூலம் சரக்குகளை விற்பனை செய்து, தேக்கத்தை குறைக்க முயன்று வருகின்றன. காலணி தயாரிப்பு நிறுவனங்களான, பேட்டா, ரீபோக் ஆகியவை, 50 சதவிகித தள்ளுபடி அறிவித்துள்ளன.

இதேபோன்று பல நிறுவனங்கள் கையிருப்பில் உள்ள சரக்குகளை வருகிற ஜூன் 30ஆம் தேதிக்குள் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் இருப்பைக் குறைத்து வருகின்றன. இரு சக்கர வாகனத் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கும் பஜாஜ் நிறுவனம் 4,500 ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் ஆன்லைன் விற்பனையில் தள்ளுபடி வழங்க வாய்ப்புள்ளது. கார் தயாரிப்பு நிறுவனங்கள், அனைத்து வகையான கார்களின் விலையை, ஜூன், 30 வரை குறைத்து வழங்குவதாக அறிவித்துள்ளன. மாருதி சுசூகி நிறுவனம், ரூ.25,000 - ரூ.35,000 வரையில், தள்ளுபடி அளித்துள்ளது. மகிந்திரா நிறுவனம், ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்.யு.500 கார்களுக்கு, ரூ.27,000 முதல் ரூ.90,000 வரை குறைத்துள்ளது.ஹூண்டாய் மோட்டார் இந்தியா, எலைட் ஐ20 மற்றும் அனைத்து எக்சன்ட் கார்களுக்கு 25,000 ரூபாய் தள்ளுபடி அளிக்கிறது. இந்நிறுவனம், சான்டாபி பிரீமியம் காருக்கு 2.50 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது

உட்லாண்டு நிறுவனம், 40 சதவிகித தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. 'லீவிஸ்' நிறுவனம் ஜீன்ஸ் ஆடைகளுக்கு , இரு ஆடைகளுக்கு, இரு ஆடைகளை இலவசமாக தருகிறது. பல நிறுவனங்கள், ரம்ஜான் பண்டிகையையொட்டி, கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி, சரக்குகளை குறைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 'டிவி, ரெப்ரிஜரேட்டர்' உள்ளிட்ட மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும், எல்.ஜி., - பானாசோனிக் ஆகிய நிறுவனங்கள், 5 - 50 சதவிகிதம் விலையைக் குறைத்துள்ளன. ஜி.எஸ்.டி.,யில், சிறிய, நடுத்தர கார் விலை சற்று உயர உள்ளது; ஆடம்பர கார் விலை குறைய உள்ளது. இரண்டு மூன்று மாதங்களில், வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று தலைவர், நுகர்வோர் மின்னணு சாதன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்புத் தலைவர் மனீஷ் சர்மா கூறுகிறார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon