மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

மலையாளத்துக்குச் சென்ற மதுரை தமிழன்!

மலையாளத்துக்குச் சென்ற மதுரை தமிழன்!

கிராமத்து மண் சார்ந்த படங்களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்துவருபவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், தற்போது மலையாளப் படத்திலும் நடிக்கவுள்ளார். மலையாள இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இன்று (ஜூன் 18) கேரளா சென்றுள்ளார்.

‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், தனது முதல் படத்திலே அசாத்திய நடிப்புத்திறனை வெளிக்காட்டினார். அதன்பிறகு ‘கொம்பன்’, ‘பாயும் புலி’, ‘சேதுபதி’, ‘அப்பா’ உள்ளிட்ட படங்களில் நடித்தாலும், சசிக்குமாருடன் இணைந்து நடித்த ‘கிடாரி’ படம்தான் இவரைப் பலருக்கும் அடையாளப்படுத்தியது. இப்படத்தில் இவர் ஏற்று நடித்த கொம்பையா பாண்டியன் பாத்திரம் சிறந்த வில்லனுக்கான விகடன் விருதையும் பெற்றுத் தந்தது.

பின்னர் ‘எய்தவன்’, ‘வனமகன்’, ‘தொண்டன்’, ‘அறம்’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது மோகன்லால், விஷால், ஹன்சிகா, மஞ்சுவாரியார் உள்ளிட்ட பலர் நடித்துவரும் ‘வில்லன்’ படத்தில் இவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படப்பில் கலந்துகொண்ட தகவலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் ‘பட்டத்து யானை’, ‘குற்றப்பரம்பரை’ உள்ளிட்ட நாவல்களும், ‘வேல ராமமூர்த்தி சிறுகதைகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பும் எழுதியுள்ளார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon