மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

மம்தா பேனர்ஜியிடம் பேசிய ராஜ்நாத் சிங்

மம்தா பேனர்ஜியிடம் பேசிய ராஜ்நாத் சிங்

மேற்குவங்கத்தில் நடக்கும் கூர்காலாந்து பிரச்னை குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

மேற்கு வங்க பள்ளிகளில் வங்கமொழி கட்டாயமாக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்ததையடுத்து, டார்ஜிலிங் பகுதியில் கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர் தலைமையில் கடந்த 7 நாட்களாக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் வன்முறையாகவும் உருவெடுத்துள்ளது. 36 காவல்துறையினர் இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் படுகாயமடைந்துள்ளனர். மேலும் திங்கள்கிழமை முதல் பந்த் நடத்தப்படும் என கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு அறிவித்திருக்கிறது. மலைப்பகுதிகளில் வங்கமொழி கட்டாயமாக்கப்படாது என மம்தா பேனர்ஜி அறிவித்திருந்தும்கூட இந்த போராட்டங்களும், பந்த் அறிவிப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்பு கொண்டு மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலை பற்றி கேட்டறிந்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில், “மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியுடன் இன்று காலையில் பேசினேன். டார்ஜிலிங் பகுதியின் நிலவும் சூழல் பற்றி அவர் எனக்கு விளக்கமளித்தார். டார்ஜிலிங் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது. இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், வன்முறையால் எந்தவித தீர்வையும் காணமுடியாது. அனைத்து பிரச்னைகளையுமே பேச்சுவார்த்தையின் மூலம்தான் தீர்க்க முடியும். இந்த பிரச்னை தொடர்பான அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் அவர்கள் இடையே இருக்கும் கருத்துவேறுபாடுகளையும், பிரச்னைகளையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என அவர் பதிவிட்டுள்ளார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon