மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

முதல்வர் மீது வழக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் பரிந்துரை!

முதல்வர் மீது வழக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் பரிந்துரை!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பாகச் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக இரண்டாகப் பிரிந்து, சசிகலா அணி சார்பில் தினகரனும் பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் விஜயபாஸ்கரின் சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறையில் ஆர்.கே.நகரில் 89 கோடி ரூபாய் அளவில் பணப் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களும், ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் வாக்காளர் பட்டியலும் சிக்கின. மேலும் பணப்பட்டுவாடா செய்ததற்காக விஜயபாஸ்கர் அறையில் சிக்கிய ஆவணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பெயரும் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வருமான வரித்துறையினர் விஜயபாஸ்கரிடம் மூன்று கட்டங்களாக விசாரணை நடத்தினர். மேலும் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக கூறி ஏப்ரல் 9ஆம் தேதி இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்தச்சூழ்நிலையில், பணப்பட்டுவாடா தொடர்பாக வழக்கறிஞர் வைரக்கண்ணன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தேர்தல் ஆணையத்துக்குச் சில கேள்விகளை எழுப்பினார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் அவருக்கு அளித்துள்ள பதிலில், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்வதற்கான பரிந்துரையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. ஆனால், காவல்துறையினர் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை’ என்று தெரிவித்துள்ளது.

இதனால் முதல்வர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் வைரக்கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை நாளை ஜூன் 19ஆம் தேதி வரவுள்ளது. ஏற்கெனவே எம்.எல்.ஏ வீடியோ விவகாரம், பழனிசாமி அணி, பன்னீர் அணி, தினகரன் அணி என பல அணிகளாக எம்.எல்.ஏ-க்கள் பிரிந்து கிடக்கும் நிலையில் முதல்வர் உள்பட அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது, எடப்பாடி அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon