மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

ஆந்திரத் தடுப்பணைகள்: ஸ்டாலின் ஆய்வு

ஆந்திரத் தடுப்பணைகள்: ஸ்டாலின் ஆய்வு

ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் இடத்தை ஆய்வு செய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆந்திராவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கர்நாடகாவில் நந்தி மலையில் உருவாகி ஆந்திராவில் பயணம் செய்து பின் வேலூர் வழியாக தமிழகத்தில் நுழையும் பாலாறு காஞ்சிபுரம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பாலாறு கர்நாடகாவில் 90 கிலோமீட்டரும், ஆந்திராவில் 45 கிலோமீட்டரும், தமிழகத்தில் 225 கிலோமீட்டரும் பயணம் செய்கிறது. பாலாறு மூலமாக தமிழகத்தில் 4,20,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பாலாறு தமிழகத்துக்கு விளங்குகிறது. ஆனால், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி வருகிறது. இதனால் தமிழகத்துக்கு அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளைக் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திடீரென திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஜூன் 18ஆம் தேதி (இன்று) ஆந்திர பயணம் சென்றுள்ளார். ஏற்கனவே, பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவதைத் தடுக்க தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்டாலினும், ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டுவதைத் தடுக்க பலமுறை தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தடுப்பணைகள் கட்டும் இடத்தை ஆய்வுசெய்த பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், “தமிழக அரசு செயலற்று உள்ளது. ஆந்திராவில் தடுப்பணைகள் கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon