மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

ஆட்சியைக் கலைக்க யாருக்கும் அதிகாரமில்லை: தம்பிதுரை

ஆட்சியைக் கலைக்க யாருக்கும் அதிகாரமில்லை: தம்பிதுரை

‘தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆட்சியைக் கலைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை’ என அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் விலைக்கு வாங்கப்பட்டது தொடர்பாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ பதிவு விவகாரம் பற்றி ஜூன் 17ஆம் தேதி தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகச் சட்டசபையில் குதிரை பேரத்தின் அடிப்படையில்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார்கள். இதுகுறித்து, அப்போதே கவர்னரிடம் புகார் கொடுத்தோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பணப்பேரத்தில்தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை எம்.எல்.ஏ. சரவணன் பேசியதாக வெளியிட்ட வீடியோ தொகுப்பின் மூலமாக ஆங்கிலத் தொலைக்காட்சி உறுதிப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து மூன்று நாள்களாக நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி சார்பில் பிரச்னை எழுப்பினோம். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. ஆதாரத்தைக் கொடுத்துவிட்டுத்தான் பேச வேண்டுமென்று தொடர்ந்து அவர் இரண்டு நாள்களாகச் சொன்னார். அதன்பேரில், நேற்று முன்தினம் அந்த ஆதாரத்தைச் சட்டமன்ற அவையில் கொடுத்தபோது, தனது அறையில்தான் தர வேண்டும் என்று சொன்னார். அவரது அறைக்குச் சென்று கொடுத்தோம். இனியாவது அது தொடர்பாகப் பேச அனுமதி அளிப்பாரா என்று தெரியவில்லை.

இந்நிலையில், ஆளுநரைச் சந்தித்து நடந்த சம்பவத்தை விரிவாக கூறினோம். உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தி, அமலாக்கப் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினோம். மேலும், குதிரை பேரத்தில் நடத்தப்பட்ட, நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்” என அவர் கூறினார்.

இந்தப் பிரச்னை பற்றி ஜூன் 18ஆம் தேதி அதிமுக எம்.பி-யும், நாடாளுமன்றத் துணை சபாநாயகருமான தம்பிதுரை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்புக்கு பிறகு தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், “மரியாதை நிமித்தமாகவே ஆளுநரைச் சந்தித்து பேசினேன். வீடியோ பதிவில் பேசியது சரவணன் எம்.எல்.ஏ இல்லை என அவரே மறுத்துள்ளார். குதிரை பேரம் தொடர்பான ஸ்டாலினின் குற்றச்சாட்டு தவறானது. கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களுக்குப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை. எம்.எல்.ஏ-க்களைப் பணம் கொடுத்து வாங்கும் முறை இந்தியாவிலேயே கிடையாது. இதுதொடர்பான நீதி விசாரணை என்பது தேவையில்லாத ஒன்று. எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டிய அவசியமில்லை. வீடியோ விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த எந்த தேவையும் இல்லை. இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள் தனியாக செயல்பட முடியாது. ஆட்சி நான்காண்டுகள் நிச்சயம் தொடரும். பழனிசாமி தலைமையிலான அரசு மீதமுள்ள நான்காண்டுகளுக்கும் நடக்கும். ஜெயலலிதாவின் ஆட்சியை கலைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை” என அவர் கூறினார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon