மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

ரஜினி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு!

ரஜினி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு!

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, நதிகளை இணைப்பது தொடர்பாக சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை இன்று ஜூன் 18ஆம் தேதி சந்தித்தார்.

வறட்சியால் பயிர்கள் கருகியதால் பட்டினியாலும் விவசாயக் கடன் தொல்லையாலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனால், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு அரசு லாபகரமான விலையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி சென்று ஜந்தர் மந்தர் பகுதியில் பல்வேறு நூதன வடிவங்களில் போராட்டம் நடத்தினர். உச்சகட்டமாகப் பிரதமர் அலுவலகம் முன்பு நிர்வாணப் போராட்டம் நடத்தினர். 42 நாள்கள் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பின்னர், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் போராடிய விவசாயிகளை நேரில் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தைத் தற்காலிகமாக கைவிட்டு தமிழகம் திரும்பினார்கள்.

இதைத்தொடர்ந்து, தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதைக் கண்டித்தும் முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் ஜூன் 8ஆம் தேதி முதல் 2 நாள்கள் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அய்யாக்கண்ணு மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் முதலமைச்சரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தனர். முதலமைச்சர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, தேசிய அளவில் விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதற்கு டெல்லியில் நடைபெற்ற தேசிய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்கு விவசாயிகளுடன் டெல்லி சென்றார். இந்தக் கூட்டம் முடிவடைந்த பிறகு அய்யாக்கண்ணு தமிழகம் திரும்பினார்.

இதைத்தொடர்ந்து இன்று ஜூன் 18ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, நதிகள் இணைப்பது தொடர்பாக சென்னையில் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தார். சந்திப்புக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. அதனால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மத்தியப்பிரதேசத்தில் உள்ள போபாலில் தொடங்கி டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்த உள்ளோம். அது மட்டுமில்லாமல், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சார்பில் டெல்லியில் வருகிற ஜூலை 10ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தை நடத்த உள்ளோம்” என்று கூறினார். மேலும், நடிகர் ரஜினிகாந்த்திடம் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டும், அவர் முன்பு நதிகள் இணைப்புக்கு ரூ.1 கோடி நிதி தருவதாக கூறியிருந்தார். அந்த நிதியைப் பிரதமர் மோடியிடம் அளித்து, அவர் தென்னிந்திய நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனக் கோரி ரஜினிகாந்த்தைச் சந்திக்க உள்ளோம் என்று கூறினார்.

பின்னர், அய்யாக்கண்ணு சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் அவரைச் சந்தித்த பிறகு வெளியே வந்த அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு திருப்தியாக உள்ளது. ரஜினிகாந்த் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நதிகள் இணைப்புக்காக நிச்சயமாக ரூ.1 கோடி நிதி தருவேன் என்று உறுதியளித்தார். மேலும், மத்திய அரசு மகாநதி, கோதாவரி, தென்பண்ணை ஆகிய ஆறுகளை காவிரி ஆறுடன் இணைக்க வேண்டும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய, அய்யாக்கண்ணு, “நாங்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குச் சென்றோம். அந்த பகுதிகளில் மக்கள் குடிக்கத் தண்ணீர்கூட இல்லாமல் துன்பப்படுகின்றனர். அதிலும், குறிப்பாக சித்தக்காபள்ளி என்ற ஊரில் குடிக்கத் தண்ணீர்கூட இல்லாமல் மக்கள் வதைகின்றனர். இந்த சித்தக்காபள்ளி என்ற ஊர் நமது நாட்டின் துணை சபாநாயகர் தம்பிதுரையின் ஊர். இதுதொடர்பாக தம்பிதுரையிடம் மனு அளித்துள்ளோம். இதற்கு அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்” என்று அய்யாக்கண்ணு கூறினார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon