மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

பெங்களூரில் முழுமையான மெட்ரோ ரெயில்: ஜனாதிபதி தொடங்கி வைத்தார்!

பெங்களூரில் முழுமையான மெட்ரோ ரெயில்: ஜனாதிபதி தொடங்கி வைத்தார்!

பெங்களூரு நகரை இணைக்கும் முழுமையான மெட்ரோ ரெயில் சேவையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார்.

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஜூன் 17ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதி ஆகிய இரு நாள்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு வருகிறார். அதையொட்டி, பெங்களூரு நகரில், நாகச்சந்திரா - எலச்சனஹள்ளி பசுமை பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா மற்றும் முதல்கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட முழுமையான சேவை தொடக்க விழா நேற்று ஜூன் 17ஆம் தேதி மாலை பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு, முதல்கட்டத் திட்டத்தின் முழுமையான மெட்ரோ ரெயில் சேவையைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

“நாட்டின் முதல் ரெயில் போக்குவரத்து வசதி, 1954ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் அமைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் மக்கள்தொகை 35 கோடி அளவுக்கு அதிகரித்து உள்ளது. பெரிய நகரங்களில் 30 லட்சத்தில் இருந்து 50 லட்சம் பேர் வரை வசிக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் மக்கள் நகரங்களை நோக்கிச் செல்வதால், நகரங்களின் மக்கள்தொகை வேகமாக உயர்ந்து வருகிறது. அதையடுத்து, நகரங்களில் உள்ள மக்களுக்கு விரைவான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது பெரும் சவாலாக உள்ளது. இதற்காக மத்திய-மாநில அரசுகள் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டியுள்ளது. நாட்டில் மெட்ரோ ரெயில் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

கொச்சியில் மெட்ரோ ரெயில் சேவையைப் பிரதமர் மோடி நேற்று ஜூன் 17ஆம் தேதி தொடங்கி வைத்துள்ளார். நாட்டில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், எட்டு நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பேசுகையில் குறிப்பிட்டார். பெங்களூருவில் கடந்த 2008ஆம் ஆண்டு மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்குள் இந்த முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது பாராட்டத்தக்கதாகும். இதில் 32 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஏற்கனவே ரெயில் சேவை நடைபெற்றுவரும் நிலையில் மேலும் 11 கிலோ மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை சேர்க்கப்பட்டுள்ளது.

ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் நிதியுதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு நகரின் விரிவாக்கத்தையடுத்து, ரூ.26 ஆயிரம் கோடி செலவில் இரண்டாவதுகட்டமாக 72 கிலோ மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் விரைந்து முடிவடைய வாழ்த்துகிறேன்” என்று ஜனாதிபதி பேசினார்.

விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா, முதல்வர் சித்தராமையா, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்த கவுடா, சபாநாயகர் கே.பி.கோலிவாட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon