மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்தில் முடிவுற்றது.

2017ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குடும்பங்களைவிட்டு சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாள்களில் சொந்த ஊருக்குச் செல்ல எளிதாக இருக்க, ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். அதன்படி கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பயணிகளின் நலன் கருதியும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது.

டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு இன்று (ஜூன் 18) தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி சென்னை எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட முன்பதிவு நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

இந்நிலையில் அக்டோபர் 16ஆம் தேதி பயணம் செய்வோருக்கான முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்துக்குள்ளே டிக்கெட் அனைத்தும் முடிவுற்றன. காலை 5 மணி முதலே ரயில் நிலையங்களில் காத்திருந்து மக்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதனால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் அனைத்து ரயில்களிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அக்டோபர் 17ஆம் தேதி ஊருக்குச் செல்பவர்கள் நாளையும் (ஜூன் 19), தீபாவளி நாளில் பயணம் செய்ய விரும்புவோர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) ஆகிய தேதிகளிலும் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தீபாவளி சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon