மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

பிலிம் ஃபேர் விருது பெற்ற நட்சத்திரங்கள்!

பிலிம் ஃபேர் விருது பெற்ற நட்சத்திரங்கள்!

இந்தியாவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக தேசிய விருதுக்கு அடுத்தபடியாக திரை நட்சத்திரங்கள் பெரிதும் எதிர்பார்க்கும் விருது ‘பிலிம்ஃபேர் விருது’. 64ஆவது தென்னிந்திய பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா நேற்று (ஜூன் 17) ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதில் சிறந்த தமிழ் நடிகருக்கான விருதை இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக மாதவன் பெற்றார். இந்த விருதுக்காக ‘கபாலி’ படத்தில் நடித்ததற்காக ரஜினிகாந்த், ‘24’ படத்தில் நடித்த சூர்யா, ‘தெறி’ பட நாயகன் விஜய், ‘கொடி’ படத்தில் நடித்த தனுஷ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

சிறந்த நடிகைக்கான விருதை ‘இறுதிச்சுற்று’ படத்தின் நாயகி ரித்திகா சிங் பெற்றார். மேலும் இந்தப் படத்தின் இயக்குநர் சுதா கே.பிரசாத் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார். கௌதம் மேனன், வெற்றிமாறன், அட்லி, பா.ரஞ்சித், ராஜூமுருகன் ஆகியோரைப் பின்னுக்குத்தள்ளி இந்த விருதை அவர் பெற்றுள்ளார்.

சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதை ராஜூமுருகன் இயக்கிய ‘ஜோக்கர்’ திரைப்படம் பெற்றது. சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘விசாரணை’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த சமுத்திரக்கனி பெற்றார். சிறந்த துணை நடிகைக்கான விருது ‘கபாலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த்தின் மகளாக நடித்த தன்ஷிகாவுக்குக் கிடைத்துள்ளது.

‘மெட்ரோ’ படத்தில் நடித்த சிரிஷ் சிறந்த அறிமுக நடிகர் விருதையும், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்த மஞ்சிமா மோகன் சிறந்த அறிமுக நடிகை விருதையும் பெற்றனர்.

சிறந்த இசையமைப்பாளர் விருது ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. ‘ஜோக்கர்’ படத்தில் ஜாஸ்மினு என்ற பாடல் பாடியதற்காக சுந்தர் ஐயர் சிறந்த பின்னணிப் பாடகர் விருதையும், ‘கபாலி’ படத்தில் மாயநதி பாடலைப் பாடிய ஸ்வேதா மேனன் சிறந்த பின்னணிப் பாடகி விருதையும் வென்றனர்.

‘24’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திரு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பெற்றார். இவர் இந்தப் படத்துக்காக தேசிய விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த பாடலாசிரியர் விருதை கவிஞர் தாமரை ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் தள்ளி போகாதே பாடலுக்காகப் பெற்றார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon