மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 24 செப் 2020

விவசாயிகளுக்காகச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்: ஆம் ஆத்மி

விவசாயிகளுக்காகச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம்:  ஆம் ஆத்மி

“இந்தியாவின் உயிர்மூச்சாக இருப்பவர்கள் விவசாயிகள். ஆனால், ஆளும் பாரதிய ஜனதா கட்சி விவசாயிகளை அலட்சியம் செய்கிறது. விவசாயிகளின் பிரச்னைகள் பற்றி விவாதிக்க நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்” என்று அர்விந்த் கெஜ்ரிவால் வற்புறுத்தி உள்ளார்.

அர்விந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கை காலத்தின் கட்டாயம். காரணம் இந்தியா முழுவதும் விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வருடம் மட்டும் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்தனர். ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதே நிலைமைதான்.

டெல்லி ஜந்தர் மந்தரில், மார்ச் மாதம் 14ஆம் தேதி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், காலவரையற்றப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பல நூதனப் போராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் 42 நாள்கள் நடைபெற்றது. சிறுநீர் அருந்தும் அளவுக்கு விவசாயிகளின் போராட்டம் உக்கிரமடைந்தது. ஆனால், மத்திய அரசு தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஒருபொருட்டாக மதிக்கவில்லை. கடைசிவரை விவசாயிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவில்லை. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்குக் காலக்கெடு விதித்தும் அதைப் புறம்தள்ளியது மத்திய அரசு.

இதேபோல் மத்தியப்பிரதேசத்திலும் விவசாயிகள் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டம் வெடித்து அதில் ஆறு விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தின் காரணமாக சில நிபந்தனைகளோடு அம்மாநில அரசு விவசாயிகளின் கடனை ரத்து செய்தது. இதற்கு முன்னதாக உத்தரப்பிரதேச அரசு விவசாயிகளின் கடனை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், விவசாயிகளின் முன்னேற்றமே இந்த அரசின் குறிக்கோள் என்று கூறிக்கொள்ளும் மத்திய அரசு விவசாயிகளின் பிரச்னைகளைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது என்று அரசியல்கட்சியினரும் சமூகநல விரும்பிகளும் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்த நிலையில்தான் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய விவசாயிகள் பிரிவு சார்பில் டெல்லியில் நேற்று (17.6.2017) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“விவசாயிகளின் பிரச்னையில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை. அமைதியாகப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். இதே போக்கைத்தான் முன்பு காங்கிரஸ் அரசும் கடைப்பிடித்தது. அதனால்தான் மக்கள் காங்கிரஸைப் புறந்தள்ளி பா.ஜனதாவை ஆதரித்தனர்.

இப்போது பா.ஜனதாவும் அதேபோல் செயல்படுவதால் இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று மக்கள் உணர்ந்துள்ளனர். ஏழைகளைச் சுரண்டுவதும், ஓட்டுக்காக மக்களைப் பயன்படுத்துவதும்தான் அந்தக் கட்சிகளின் வேலை என்பதையும் தெரிந்துகொண்டனர்.

விவசாயிகளைக் காப்பாற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவதாக பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆனால், அதை அமல்படுத்தாமல் விவசாயிகளின் முதுகில் குத்திவிட்டது. அமல்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்து உள்ளது.

விவசாயிகள் கடனில் தத்தளிக்கிறார்கள். தற்கொலை செய்யும் சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள். ரூ.9,000 கோடி கடன் பெற்றவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடுகிறார்கள். அவர்கள் தப்புவதற்கு அரசும் உதவி செய்கிறது. ஆனால், அப்பாவி விவசாயிகளைப் பாடாய்படுத்துகிறது. விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க, விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க நாடு முழுவதும் ஆங்காங்கே குளிர் பதனக்கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும். விவசாயிகளின் பிரச்னைகள் பற்றி விவாதிக்க நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் இறந்த விவசாயிகளைத் தியாகிகளாக அங்கீகரிக்க வேண்டும்”. இவ்வாறு அர்விந்த் கெஜ்ரிவால் கூறினார். இந்தக் கூட்டத்தில் தமிழக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உள்பட அனைத்து மாநில முக்கிய நிர்வாகிகள் மற்றும் விவசாயப் பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon