மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

இந்திய அணியின் முன்னிலை தொடருமா?

இந்திய அணியின் முன்னிலை தொடருமா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 15 சர்வதேச உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் ஐந்து டி-20 போட்டிகளும், பத்து ஒருநாள் போட்டிகளும் அடங்கும். ஐந்து உலகக்கோப்பை டி-20 போட்டிகளையும் இந்திய அணி 5-0 என்ற நிலையில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. அதேபோல் உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகளிலும் 10 போட்டிகளில் 8-2 என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. கடைசியாக பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடிய ஏழு போட்டிகளில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்து வந்தாலும், மொத்த ஒருநாள் போட்டிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் 72-52 என முன்னிலை பெற்றுள்ளது பாகிஸ்தான்.

இதுவரை மொத்தமாக நான்கு முறை இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதுவே சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் ஓர் அணியின் அதிகபட்சமாகும். ஆனால், பாகிஸ்தான் அணிக்கு இதுவே முதல் சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியாகும். அதேபோல் கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. அதிலிருந்து இந்திய அணி விளையாடியுள்ள உலகக்கோப்பை தொடர்களில், இந்திய அணி 34 போட்டிகளில் வெற்றி பெற்று ஏழு போட்டிகளில் மட்டுமே தோல்வியைத் தழுவியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணி 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை விளையாடியுள்ள உலகக்கோப்பை போட்டிகளில் 21 போட்டிகளில் வெற்றி பெற்று 16 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் ட்ராபியை எடுத்துக்கொண்டால், பேட்டிங் ஆவரேஜில் இந்திய அணி 91.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதுவரை நடப்பு சாம்பியன்ஸ் தொடரில் மட்டும் இந்திய அணி 1098 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் சிறப்பாக விளையாடிக் கூடுதல் பலம் சேர்த்து வருகிறார். ஆனால், இந்திய அணியின் பந்து வீச்சு சற்றே மோசமான நிலையில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பங்கேற்பது சந்தேகம் என்றே தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தால் அவர் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போட்டி தொடங்கும் போதுதான் அவரின் நிலை குறித்து அறிந்து கொள்ள முடியும்.

ஆனால், நடப்பு சாம்பியன்ஸ் தொடரில் 31.77 பவுலிங் ஆவரேஜ் கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, பந்து வீச்சில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் சிறந்து விளங்கும் இந்திய அணியும், பந்து வீச்சில் சிறப்பாக இருக்கும் பாகிஸ்தான் அணியும் இன்று போட்டியில் மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon