மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

ரசிகர்களுக்கு அரவிந்த்சாமியின் ‘சினிமா விருந்து’!

ரசிகர்களுக்கு அரவிந்த்சாமியின்  ‘சினிமா விருந்து’!

தமிழ் சினிமாவில் ‘ஆணழகன்’ என்று பேசப்பட்டவர் நடிகர் அரவிந்த்சாமி. அவரின் 47ஆவது பிறந்த நாள் (ஜூன் 18) இன்று கொண்டாடப்படுகிறது. இயக்குநர் மணிரத்னம் மூலம் ‘ரோஜா’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அதன்பிறகு ‘பம்பாய்’, ‘இந்திரா’, ‘மின்சாரக் கனவு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர், அதற்குப் பிறகான படங்களில் தொடர் தோல்வியைச் சந்தித்தார். பின்னர் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். எதிர்பார்ப்பை உண்டு பண்ணிய இப்படம், அவருக்கு ஏமாற்றத்தையே உண்டாக்கியது.

மோகன்ராஜா இயக்கத்தில் ‘தனி ஒருவன்’ படத்தில் மீண்டும் நெகட்டிவ் ரோலில் களமிறங்கினார். இப்படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்ததோடு தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சுற்றுவர வழிவகை செய்தது. அதன் பின்னர் நடித்த ‘போகன்' படமும் வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ மற்றும் ‘நரகாசூரன்’ ஆகிய படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில் அரவிந்த்சாமியின் பிறந்த நாளையொட்டி, அவர் நடிக்கவுள்ள ‘நரகாசூரன்’ படத்தின் போஸ்டரை இன்று தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கார்த்திக் நரேன். இந்த போஸ்டரில் ‘நரகாசூரன்’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்னொரு படமான ‘வணங்காமுடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று (ஜூன் 18) சிம்பு தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இயக்குநர் செல்வா இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, ரித்திகாசிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், கணேஷ் வெங்கட்ராமன், சிம்ரன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு கோகுல் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் மேற்கொள்கின்றனர். எனவே இவ்விரு படங்களின் போஸ்டர்களும் அரவிந்த்சாமிக்கும் ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளன.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon