மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கைது!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கைது!

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் ஐந்து பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்தச் சம்பவத்தால் இன்று ஜூன் 18ஆம் தேதி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

ஆண்டுதோறும் கடல் மீன்களின் இனப்பெருக்கக் காலமான ஏப்ரல் - மே மாதங்களில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை வங்கக்கடலில் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இந்த மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவு முடிவுக்கு வந்ததையடுத்து, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இதனிடையே, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் கைது செய்வோம் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் கடற்படையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கோட்டைபட்டணம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதிக்குச் செல்வதை தவிர்த்தனர். பெரும்பாலும், மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். இருப்பினும் சில மீனவர்கள் வழக்கம்போல, நெடுந்தீவு பகுதிக்குச் சென்று மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நள்ளிரவில் கடலில் வலையை விரித்து மீனுக்காகக் காத்திருந்தபோது, அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதாகக் கூறி இங்கு மீன்பிடிக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழக மீனவர்கள் அங்கிருந்து விரைவாகப் புறப்பட்டுள்ளனர்.

அப்போது, இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும் அதில் இருந்த ஐந்து மீனவர்களையும் சிறை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து மீனவர்களையும் இலங்கை காங்கேசன் துறைமுகம் அழைத்து சென்று அவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்திவருகின்றனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. இதைத்தொடர்ந்து, மீனவர்கள் சிறைப்பிடிப்பு சம்பவத்தால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon