மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

மேற்கு வங்காளத்தைப் பிரிக்க முடியாது: மம்தா பானர்ஜி!

மேற்கு வங்காளத்தைப் பிரிக்க முடியாது: மம்தா பானர்ஜி!

டார்ஜிலிங்கில் கூர்க்காலாந்து என்று தனி மாநிலம் அமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக இன்று ஏழாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், மேற்கு வங்காளத்தைப் பிரிக்க அனுமதிக்க முடியாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம் டார்ஜிலிங்கில் உள்ள கூர்க்கா இன மக்கள் தனி மாநிலம் அமைக்க வேண்டுமெனக் கோரிக்கை வலுத்து வருகிறது. அதையடுத்து, மேற்கு வங்காள மாநிலத்திலிருந்து கூர்க்காலாந்த்தைப் பிரித்துத் தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் எனக் கூர்க்கா ஜனமுக்தி மோர்சா கட்சி கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் காலவரையறையற்ற போராட்டத்தைத் தொடங்கியது. கூர்க்கா இன மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் ஜூன் 16ஆம் தேதி கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றதையடுத்து போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இதனால் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், போராட்டம் குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஜூன் 17ஆம் தேதி கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கூர்க்காலாந்து போராட்டம் தீவிரவாதிகளால் ஊக்குவிக்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் பத்திரிகையாளர்களைக் கடத்தி, பிணையக் கைதிகளாக வைத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீச்சு தாக்குதல் மட்டும் நடத்தி எதிர்ப்பைக் காட்டி இருந்தார்கள் எனில் இதை வேறு மாதிரி அணுகி இருப்பேன். ஆனால், அவர்களிடம் அதிகளவிலான ஆயுதங்கள் உள்ளன. போராட்டக்காரர்கள் கோரிக்கைகள் குறித்து என்னிடம் நேரிடையாகக் கூறியிருந்தால், அதைப் பற்றி அவர்களுடன் விவாதித்திருப்பேன். ஆனால், அதை விடுத்து, ஆயுதத்தை வைத்து மிரட்ட வேண்டும் என்று திட்டமிட்டால், அந்த ஆயுதத்தை எப்படி பறிமுதல் செய்வது என்று எனக்குத் தெரியும். மேற்கு வங்காள மாநிலத்தை என் உயிரே போனாலும் பிரிப்பதற்கு அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon