மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

யாரையும் விட்டுவைக்கவில்லை இந்த சுவாரஸ்யம்!

யாரையும் விட்டுவைக்கவில்லை இந்த சுவாரஸ்யம்!

சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூன் 18) மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்திய அணியுடன் மற்ற அணிகள் இறுதிப்போட்டியில் மோதியிருந்தால் இந்த அளவுக்கு சுவாரஸ்யம் இருந்திருக்குமா என நிச்சயம் சொல்ல முடியாது. இந்தியா -பாகிஸ்தான் அணிகளிடையே இறுதிப்போட்டி என்பதால்தான் இத்தகைய எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்தப் போட்டி எந்த அளவுக்கு எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்கனவே மின்னம்பலத்தில் பதிவிட்டிருந்தோம். இந்திய ரசிகர்கள் இன்று காலை ஆங்காங்கே பூஜைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்ற செய்தியின் மூலம், இந்தப் போட்டி எந்த அளவுக்கு எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது. இதை மேலும் சுவாரஸ்யமாக்கும் நோக்கத்திலும் தனது தொழிலை மேம்படுத்தும் நோக்கத்திலும் டெல்லியைச் சேர்ந்த ராஜேந்திர பேலஸ் என்ற ஹோட்டலில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மூன்று பெரிய திரைகளில் போட்டியானது திரையிடப்படுகிறது. போட்டியைக் காணவரும் அனைத்து ரசிகர்களுக்கும் இந்தியன் ஜெர்சி மற்றும் ஒரு ஜக் பீர் இலவசமாக வழங்கப்படும் என்றும் போட்டியில் இந்திய அணி வீரர்கள் கைப்பற்றும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் உணவருந்தும் நபர்களுக்கு 5 முதல் 20 சதவிகிதம் வரை உணவில் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரி மற்றும் சிக்சருக்கும் சைவ மற்றும் அசைவ ஸ்டார்டர்கள் பாதி விலையில் வழங்கப்படும் என ஹோட்டல் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஹோட்டல் உரிமையாளர் கூறும்போது, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதைவிட வேறு எதுவுமே பெரியது இல்லை. நாங்கள் அனைவருமே இந்தியாவின் வெற்றிக்கு அணிவகுத்து நிற்கிறோம் என்று தெரிவித்தார். இதன் மூலம் இன்று ஒரே நாளில் மிக பிரபலமானது ராஜேந்திர பேலஸ் ஹோட்டல். சாதாரண பாமரன் முதல் அனைத்து தரப்பு ரசிகனின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்தியா - பாகிஸ்தான் போட்டி.

ஞாயிறு, 18 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon