மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

ஆட்சியைக் கலைக்க வேண்டும்: கவர்னரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்!

ஆட்சியைக் கலைக்க வேண்டும்: கவர்னரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை சென்னைக்கு வந்த கவர்னரைச் சந்தித்து, ‘அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பணம் வாங்கியது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்’ என்றும், ‘அதிமுக அரசைக் கலைக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகக் கடந்த பிப்ரவரி மாதம் கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அதிமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குப் பல கோடி ரூபாய் கைமாறியது என்ற செய்தி குறித்து மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேசிய வீடியோ பதிப்பை கடந்த ஜூன் 12ஆம் தேதி டைம்ஸ் நவ் தொலைக்காட்சி ரகசியமாக டேப் செய்து வெளியிட்டது. இந்தச் செய்தி குறித்து நமது மின்னம்பலத்தில் நாம் கடந்த ஜூன் 13ஆம் தேதி பதிவு செய்திருந்தோம்.

எம்.எல்.ஏ. சரவணன் கூறிய செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்ததும், அந்தப் படத்தில் இருப்பது நான்தான். ஆனால், நான் அவ்வாறு கூறவில்லை என்று சரவணன் மறுப்பு தெரிவித்தார்.

அதையடுத்து, இந்தப் பிரச்னையைச் சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டசபை தொடங்கியது முதல் தொடர்ந்து மூன்று நாள்களாகத் தெரிவித்தும் சபையில் பேச அனுமதிக்கப்படவில்லை. அதனால், ஜூன் 16ஆம் தேதி சபையில் இருந்து வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின், அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்குப் பணம் கைமாறியதற்கான உரையாடல் அடங்கிய சி.டி-யைச் செய்தியாளர்களிடம் காண்பித்து பேசியபோது, இந்த விவகாரம் தொடர்பாக கவர்னரையும் சந்திப்பதாகக் கூறினார். இந்நிலையில் தமிழகப் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று மாலை சென்னை வந்தார். அதையடுத்து, கவர்னரை மு.க.ஸ்டாலின் ராஜ்பவனில் நேற்று ஜூன் 17ஆம் தேதி சந்தித்தார். அப்போது, அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்குப் பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக தனது கருத்துகளை கவர்னரிடம் தெரிவித்த மு.க.ஸ்டாலின், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தியுள்ளார். அவருடன் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, அபுபக்கர் ஆகியோரும் சென்றிருந்தனர்.

கவர்னருடனான சந்திப்புக்குப் பின்னர் மு.க.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது: “தமிழக சட்டசபையில் குதிரை பேரத்தின் அடிப்படையில்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார்கள். இதுகுறித்து, அப்போதே கவர்னரிடம் புகார் கொடுத்தோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பணப்பேரத்தில்தான் இந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை எம்.எல்.ஏ. சரவணன் பேசியதாக வெளியிட்ட வீடியோ தொகுப்பின் மூலமாக ஆங்கிலத் தொலைக்காட்சி உறுதிப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து மூன்று நாள்களாக நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி சார்பில் பிரச்னை எழுப்பினோம். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. ஆதாரத்தைக் கொடுத்துவிட்டுத்தான் பேச வேண்டுமென்று தொடர்ந்து அவர் இரண்டு நாள்களாகச் சொன்னார். அதன்பேரில், நேற்று முன்தினம் அந்த ஆதாரத்தைச் சட்டமன்ற அவையில் கொடுத்தபோது, தனது அறையில்தான் தர வேண்டும் என்று சொன்னார். அவரது அறைக்குச் சென்று கொடுத்தோம். இனியாவது அது தொடர்பாகப் பேச அனுமதி அளிப்பாரா என்று தெரியவில்லை.

இந்நிலையில், ஆளுநரைச் சந்தித்து நடந்த சம்பவத்தை விரிவாக கூறினோம். உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தி, அமலாக்கப் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினோம். மேலும், குதிரை பேரத்தில் நடத்தப்பட்ட, நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறினார்.

சனி, 17 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon