மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

இந்தியா vs பாகிஸ்தான்: பேட்டிங்கை மிஞ்சும் பெட்டிங்!

இந்தியா vs பாகிஸ்தான்: பேட்டிங்கை மிஞ்சும் பெட்டிங்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சாதாரணமாக ஒருநாள் தொடரில் மோதிக்கொள்ளும்போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகளவில் காணப்படும். தற்போது தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைவரது வீடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இந்த வசதிகள் இல்லாத காலகட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பொது தொலைக்காட்சிகளிலோ அல்லது தொலைக்காட்சி விற்பனை நிலையங்களின் வாசல்களிலோ நின்றுகொண்டே போட்டியை ரசித்தது மறந்துவிட முடியாத ஒன்று. நிற்க நேரமின்றி ஓடிய நபர்களும் ஒரு நொடி நின்று இந்தியா - பாகிஸ்தான் போட்டியைத் திரும்பி பார்த்தனர் என்பதுதான் நிதர்சனம். இவ்விரு அணிகளும் மோதும் போட்டிக்கு அப்போது இருந்த அந்த எதிர்பார்ப்பு இந்தக் காலகட்டத்தில் குறைந்துள்ளதா என்றால் நிச்சயம் இல்லை என்றே கூறலாம். முன்பிருந்த அளவைவிட, தற்போது அதிகரித்துள்ளது என்பதே உண்மை.

கையிலிருக்கும் மொபைல்கள் மூலமே ஸ்கோர் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியானது அதிக ரசிகர்களால் பார்வையான கிரிக்கெட் போட்டி என்ற சாதனையைப் படைத்தது. அதேபோல் இந்தப் போட்டியும் அனைத்துத் தரப்பு கிரிக்கெட் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்துள்ளது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அலுவலகம், தேநீர் விடுதி, பேருந்து நிறுத்தம் என பல்வேறு இடங்களிலும் இன்று நடைபெறவிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் பற்றிதான் கடந்த சில தினங்களாகப் பேசப்பட்டு வருகிறது. இத்தகைய எதிர்பார்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த கிரிக்கெட் ஒளிபரப்பு சேனலான ஸ்டார், விளம்பரம் செய்ய நிறுவனங்கள் வழங்கவேண்டிய தொகையை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி இன்று (ஜூன் 18) நடைபெறும் போட்டியில் சுமார் 30 நொடிகள் விளம்பரம் செய்ய ரூ.1 கோடி தொகையை நிர்ணயம் செய்துள்ளது. இதற்கு முன்னர் ரூ.10 லட்சமாக இருந்த இந்த தொகை 10 மடங்கு தற்போது அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி பெட்டிங் என்ற ஒன்று முறையானதாக நடைபெறும் லண்டனில் போட்டி நடைபெறுவதால், அங்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறும் போட்டிக்காக பெட்டிங் நடத்தப்பட்டது. அதில் சுமார் ரூ.2,000 கோடி பெட்டிங் நடைபெற்றுள்ளதாக All India Gaming Federation (AIGF) தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நபரும் தங்களுக்கு விருப்பமான அணியின் மீது ரூ.100 பெட்டிங் செய்யலாம். அதில் இந்திய அணி மீது பெட் செய்தவர்களுக்கு, இந்திய அணி வெற்றிபெற்றால் ரூ.147 வழங்கப்படும். மாறாக பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றால், பாகிஸ்தான் மீது பெட்டிங் செய்த நபர்கள் ரூ.300 பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் All India Gaming Federation (AIGF) தெரிவித்த செய்தியில் இந்திய அணி கடந்த ஒரு வருட காலமாக விளையாடிவரும் போட்டிகளுக்கு இங்கு பெட்டிங் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்பதால் எதிர்பார்க்காத அளவுக்கு பெட்டிங் நடைபெற்றுள்ளது. ரூ.2,000 கோடி பெட்டிங் நடைபெறுவது இதுவே முதன்முறை. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் உலகக்கோப்பை இறுதிப் போட்டி என்பதனால் இந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

சனி, 17 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon