மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

சன்டே சர்ச்சை: சிவகார்த்தி ‘ஜோசியப் பூஜை’யுடன் ரெடி!

சன்டே சர்ச்சை: சிவகார்த்தி ‘ஜோசியப் பூஜை’யுடன் ரெடி!

பூஜை, பூஜை எல்லாத்துக்கும் பூஜை. சிவகார்த்திகேயன் - ஆர்.டி.ராஜா (24AM STUDIOS) கூட்டணியில் எதைத் தொட்டாலும் பூஜை போட வேண்டும் என ஜோசியம் சொன்னதன் விளைவாக கோலிவுட்டுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில், ‘வேலைக்காரன்’ படத்துக்காக டப்பிங் பேசத் தொடங்கியபோதுகூட பூஜை செய்து தொடங்கியது சிவகார்த்திகேயன் - மோகன் ராஜா - ஆர்.டி.ராஜா குழு.

‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு ஜோசியம் பார்த்தபோது, இனி எந்த வேலையைத் தொடங்கினாலும் பூஜை போட்டுவிட்டு தொடங்குங்கள் என ஜோசியக்காரர் சொன்னதால்தான், டப்பிங்குக்குப் பூஜை போட்டோம் எனப் படக்குழுவைச் சேர்ந்தவர்கள் சொல்லும்போது, அவர்கள் சீரியஸாகப் பேசுவது தெரிந்தது. இதற்கே இப்படியா? அடுத்தப் படத்துக்கு என்ன பன்றோம் பாருங்க என்று அவர்கள் சொல்லிச்சென்றபோதே தெரியும், முன்பைவிட ஹெவியாக வருவார்கள் என்று.

சிவகார்த்திகேயனின் அடுத்தத் திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் உருவாகிறது. இதன் பூஜைதான் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. சிவகார்த்திகேயனுக்கென்று ஒரு ரூட் உருவாகிவிட்டது. ஒரு திரைப்படத்தை கிராமப் பின்னணியில் நடித்தால், அடுத்தத் திரைப்படம் நகரம் சார்ந்த (குறிப்பாக வடசென்னை) படமாக நடிப்பது என அவருக்கென்று ஒரு விதியை உருவாக்கிக்கொண்டார்.

ஏற்கெனவே, பல கோலிவுட் நடிகர்கள் சென்ற ரூட்தான் என்றாலும்... குடும்பம், சென்டிமென்ட், குழந்தைகளைக் கவர்தல், இளைஞர்கள், முக்கியமாக அவரை வாழவைத்துக்கொண்டிருக்கும் ரசிகைகள் என அவரது ரூட் பரந்துபட்டது. இதன்படி ‘ரெமோ’ வரை எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தபோது நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்ததுபோல, மோகன் ராஜா திரைப்படம் கிடைத்தது.

அதனால், ரெமோ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் கமிட்டாக வேண்டிய கிராமத்துத் திரைப்படம் தள்ளிப்போனது. ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்தபோதே, பொன்ராமுக்குப் படம் நடித்துக்கொடுப்பதாக சிவகார்த்திகேயன் கொடுத்த வாக்கு பொய்த்துப்போனது. அதனால், மோகன் ராஜாவின் வேலைக்காரன் முடிந்த உடனே பொன்ராம் படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கியிருக்கிறார்கள்.

டப்பிங் முடிய சில நாள்கள் இருந்தாலும், நேற்று (ஜூன் 17) நல்ல நாள் என்பதால் SK12 என இப்போதைக்குப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் பூஜை அகத்தியர் கோயிலில் நடைபெற்றிருக்கிறது. மொத்த படக்குழுவும் வர வேண்டும் என தயாரிப்பாளர் சார்பில் சொல்லப்பட்டிருந்தாலும், இந்நிகழ்வில் சமந்தா மட்டும் மிஸ்ஸிங். நாக சைதன்யாவுடன் திருமண வேலையில் ஈடுபட்டிருப்பதாகச் சமந்தாவின் வரவு பற்றித் தகவல்கள் வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை, படத்தில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலிலேயே முடித்துக்கொடுப்பதாக இயக்குநர் வாக்குறுதி கொடுத்திருப்பதால் அதற்குத் தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார் சமந்தா.

மற்ற படங்களாக இருந்தால் மாடர்ன் டிரஸ்ஸுக்குப் பதிலாக, பாவாடை தாவணியில் நடித்துவிட்டு சென்றுவிடலாம். ஏன், பொன்ராமின் முந்தைய படத்திலேயே கூட ஹீரோயின்களுக்கு அந்த வேலை மட்டும்தான் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப்படத்தில் சமந்தாவுக்குச் சிலம்பத்தை வைத்து சண்டையிடும் காட்சிகளெல்லாம் வைத்திருக்கிறார்கள். பொன்ராமின் முந்தைய படங்களைப்போல, ஊர் பெரிய குடும்பத்தின் மகளையோ, மாமன் மகளையோ துரத்திக் கரம்பிடிப்பது மட்டும் சிவகார்த்திகேயனின் வேலை அல்ல. ஊர் மக்களுடன் சேர்ந்து பிறந்த ஊரின் நன்மைக்காகப் போராடவேண்டிய முக்கியக் கடமை இருப்பதால், ஹியூமரை ஒதுக்கிவைத்துவிட்டு ஹீரோயிசத்தைத் தூக்கலாக வைத்திருக்கிறார்கள். ஆனாலும், யோகி பாபு - சூரி - மனோ பாலா என குணச்சித்திர கேரக்டர்கள் படம் முழுக்க நிறைந்து நம்மை சிரிக்கவைக்கக் காத்திருக்கின்றனர். சண்டைக்கு நெப்போலியனும், வில்லத்தனத்துக்கு சிம்ரனும் என சிவகார்த்திகேயனின் 12ஆவது படம் படப்பூஜையுடன் அமர்க்களமாக தொடங்கிவிட்டது.

சனி, 17 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon