மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

புதுக்கட்சி: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் ரஜினி ஆலோசனை!

புதுக்கட்சி: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் ரஜினி ஆலோசனை!

‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி... சொல்லடி எந்நாள் நல்ல தேதி?’ என்று ‘தளபதி’ படத்தில் ரஜினி பாடினார். அதே பாடலை ரஜினி ரசிகர்கள் வேறுவிதமாகப் பாடி, கட்சி ஆரம்பிக்கும் தேதி எது என்று கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பதில் சொல்லும்விதமாக வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்த நாள்தான் அந்த நன்னாள் என்று செய்தி பரவி, அரசியல் வட்டாரத்தில் ஹைப்பர் டென்ஷனை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது..

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது கனலா, கானலா என்று தலைப்பெல்லாம் வைத்து தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் ஒருபக்கம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்க... இன்னொரு பக்கம், மும்பையிலும் சென்னையிலுமாக தனது ரகசிய சந்திப்புகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ரஜினி. அரசியல் ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள், ஊடகவாதிகள், இயக்கங்களின் தலைவர்கள், அறிவுஜீவிகள் என்று பல தரப்பினரையும் பார்த்து பல விஷயங்கள் பற்றி விவாதித்த ரஜினி, இப்போது அடுத்த கட்டமாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இதுபற்றி ரஜினியின் வட்டாரத்தில் பேசினோம்.

“ரஜினி மிகவும் நிதானமாக காய் நகர்த்தி வருகிறார். கட்சி ஆரம்பிப்பது என்ற முடிவெடுத்தப்பின் தனது ரசிகர்களை முதலில் சந்தித்து பொது வெளியில் தன்னைப் பற்றிய எதிர்பார்ப்பு அலையை அதிகப்படுத்தினார். அதையடுத்து போயஸ் கார்டனில் ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுர்களைச் சந்தித்தார். அவர்களுடன் தனது பலம், பலவீனம் பற்றி வெளிப்படையாகக் கேட்டறிந்தார். தான் சந்தித்தவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார் ரஜினி.

கட்சி பெயர், கட்சியின் கொடி பற்றியெல்லாம் ஒருபக்கம் ஆலோசனை நடத்திவரும் ரஜினி, இப்போது கட்சியின் நிர்வாக அமைப்புகள், சட்ட விதிகள் போன்ற விஷயங்களையும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் நடைமுறை விஷயங்களுக்காக நான்கு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். கட்சியின் அமைப்பு விதிகள் சட்ட திட்டங்கள், கொள்கை கோட்பாடுகள் வகுப்பதன் ஒருகட்டமாகத்தான் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது.

ஆந்திராவில் என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்தபோது தனது கட்சிக்குச் சட்ட திட்டங்களை வகுப்பதற்காக ஒரு முன்மாதிரியைத் தேடினார். அப்போது தனது நண்பரும் திமுக-வின் முன்னோடித் தலைவருமான ஆற்காடு வீராசாமியை தொடர்புகொண்டு திமுக-வின் சட்ட திட்டங்கள் பற்றிய தொகுப்பைக் கேட்டார். ஆற்காடு வீராசாமியும் திமுக தலைவர் கருணாநிதியிடம் பேசி தனது நண்பரான என்.டி.ராமராவுக்காக திமுக-வின் ‘பை-லா’ எனப்படும் தொகுப்பைக் கொடுத்து உதவினார். திமுக-வை முன்மாதிரியாகக்கொண்டே தெலுங்கு தேசம் கட்சியின் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.

அதுபோல ரஜினியும் இப்போது வெளிமாநிலங்களில் வெவ்வேறு கட்சிகளில் இருக்கும் தனது நண்பர்களிடம் பை-லாக்களைக் கேட்டிருக்கிறார். இதெல்லாம் சேர்த்து தனது கட்சியின் புதிய கட்டமைப்பை ரஜினி இறுதி செய்வார்” என்று முடித்தனர் அவர்கள்.

ஒருபக்கம் காலா... இன்னொரு பக்கம் கட்சிக்கு பை-லா என இப்போது அதிதீவிரப் பணிகளில் இருக்கிறார் ரஜினி.

- ராகவேந்திரா ஆரா

சனி, 17 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon