மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

இலங்கையில் உள்ள படகுகளை விடுவிக்கக் கோரும் மீனவர்கள்!

இலங்கையில் உள்ள படகுகளை விடுவிக்கக் கோரும் மீனவர்கள்!

‘இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 145 மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டும்’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்குத் தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ நேற்று ஜூன் 17ஆம் தேதி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பல்வேறு காலக்கட்டங்களில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அப்படி பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 145 மீன்பிடி படகுகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் முடக்கிவைக்கப்பட்டுப் பாழாகி வருகிறது. அந்தப் படகுகளின் மதிப்பு ரூ.70 கோடி ஆகும்.

அண்மையில், இலங்கையில் முடக்கிவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் 145 படகுகளில் முதல்கட்டமாக 42 படகுகள் விடுவிக்கப்படும் என்று இலங்கை அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை படகுகள் விடுவிக்கப்படவில்லை. அனைத்து படகுகளையும் உடனடியாக விடுவிக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை அரசின் உயர்மட்டத்தில் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 தமிழர்கள் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் உள்பட 6 மாவட்ட மீனவர்களை இந்திய ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு ஊக்குவிக்கும் திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதியை மத்திய அரசு மானியமாக வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த ஓர் ஆண்டில் மட்டும் 750 படகுகளை விரிவாக்கம் செய்ய ரூ.200 கோடி நிதி தமிழக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில முதலமைச்சர் மீனவர்களுக்குப் மீன்பிடி தடைக்கால நிவாரணமாகப் பெரிய படகு ஒன்றுக்குத் தலா ரூ.75 ஆயிரம் மற்றும் தடை காலத்தில் படகுகளைச் சீர் செய்யப் பெரிய படகுகளுக்குத் தலா ரூ.30 ஆயிரம், ஃபைபர் படகு ஒன்றுக்கு தலா ரூ.15 ஆயிரம் நிதி வழங்கி உத்தரவிட்டுள்ளதற்கு நன்றி” என்று இளங்கோ தெரிவித்தார்.

சனி, 17 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon